சிவிலியன்களை ஹமாஸ் கேடயங்களாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் புகார்!
காசாவில் சிவிலியன்கள் மீதான நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் விடுத்த வேண்டுகோளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்தார். இந்த மரணங்களுக்கு ஹமாஸ்தான் பொறுப்பே தவிர இஸ்ரேல் அல்ல என்று பிரதமர் நெதன்யாகு கூறியதாக இஸ்ரேல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதில் இஸ்ரேல் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகள்தான் எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதாவது சிவிலியன்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற விடாமல் தடுத்து வருகிறது என்றார்.
சிவிலியன்கள் மீது இஸ்ரேல் அக்கறை கொண்டுள்ளது. அதனால்தான் அவகளை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், ஹமாஸ், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் மனிதநேயமே இல்லாமல் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை பிணையாக பிடித்துவைத்துள்ளனர். பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகளை அவர்கள் பயங்கரவாதிகளின் புகலிடமாகக் கொண்டுள்ளனர் என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறினார்.
இன்று ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்தி வரும் குற்றச் செயல்கள் நாளை நியூயார்க், பாரீஸ் என உலகின் எந்த நாட்டிலும் எந்தப் பகுதியிலும் நடக்கலாம் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார். உலகத் தலைவர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளின் செயல்களைத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர இஸ்ரேலை கண்டிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் அரபு செய்தித் தொடர்பாளர் அவிசாய் அட்ராயி எக்ஸ் தளம் மூலம் விடுத்துள்ள செய்தியில் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்தே காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை இஸ்ரேல் நடத்தியுள்ள பதில் தாக்குதலில் ஹாமாஸ் தீவிரவாதிகள் 150 பேர கொல்லப்பட்டதாகவும் வடக்கு காசாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லியர் ஹயாத் வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த மாதம் ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,200 -லிருந்து 1,400 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இந்த எண்ணிக்கை அதிகரித்த தற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.