
நாற்பதிலேயே அனைத்தும் முடிந்து விரக்தி நிலையில் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடமனமின்றியும் நேரமின்றியும் இருக்கும் இன்றைய தலைமுறையினரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது இந்த சுவாரசியமான குடும்ப நிகழ்வு. ஆம். இன்னும் இரண்டு வருடங்களில் நூறாவது வயதை எட்டப் செய்திதான் அந்த ஆச்சர்யத்துக்குக் காரணம்.
மதுரை திருமங்கலம் அருகே கூடகோவில் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராசு, வேலாயி தம்பதி. இவர்களுக்கு ஆறு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் என ஒன்பது பிள்ளைகள். 93 வயதில் ராசு மறைந்தார். இந்நிலையில் பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு தற்போது 98 வயது ஆகிறது. 98 வயதான வேலாயி அம்மாளுக்கு அவரது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்து கூடகோவிலில் உள்ள வேலாயி அம்மாள் இல்லத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருந்தனர்.
மகன் வழி பேரன், பேரனின் மகன்கள், பெயர்த்திகள் ஆகியோர் ஏற்பாட்டின் படி நான்கு தலைமுறைகளை கண்ட பாட்டி வேலாயி அம்மாள் தனது பிறந்தநாளை (நேற்று முன்தினம்) கேக் வெட்டி கொண்டாடினார். இதனை அடுத்து விழாவில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. தங்களின் வழிகாட்டியான அன்புப்பாட்டியின் பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டும் என நினைத்த ஆசை தற்போது நிறைவேறி உள்ளதாக பேரன்கள் மகிழ்ச்சி பொங்க கூறினர்.
பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான்கு தலைமுறை பிள்ளைகள் மற்றும் கிராமத்தினர் உடனிருந்து வாழ்த்து பெற்றதோடு வேலாயிப்பாட்டியின் அவரது சகோதரி கருப்பாயி அம்மாளும் பங்கேற்று வாழ்த்தியது விழாவில் கூடுதல் சிறப்பாக அனைவரையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. ஆம். கருப்பாயிப் பாட்டிக்கு வயது அப்படியொன்றும் அதிகமில்லை, ஜஸ்ட்105 தான். 98 வயது தங்கையின் பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரி பங்கேற்று மகன்கள் பேரன், பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடகோவில் கிராம மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போதைய காலகட்டத்தில் 60 வயதை தாண்டினாலே போதும் எனும் மனப்பான்மை வந்து விட்டது.
இந்த சூழ்நிலையில் 105 வயதான அக்காவுடன் பிறந்தநாள் கொண்டாடிய வேலாயி தனது ஆரோக்கியம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா? உடல் நலத்திற்கு தீங்கில்லாத ஆரோக்கியமான உணவு பழக்கமே இத்தனை ஆண்டுகள் வாழ காரணம் எனக் கூறியுள்ளார் பாட்டி.
ஆரோக்கியமான உணவுடன் ஆரோக்கியமான எண்ணங்களும் நீண்ட ஆயுளைத் தரும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. இந்தப் பாட்டிகளை நாமும் வாழ்த்தி அவர்களின் வழியைப் பின்பற்றி நீண்டகாலம் வாழ்வோமே.