“ஹாட்ஸ் ஆஃப் பிரதமர் மோடி” : ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி

“ஹாட்ஸ் ஆஃப் பிரதமர் மோடி” : ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ,க. ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது, இந்த அபார வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் பா.ஜ.க.வினர் நன்றி சொல்லவேண்டும். தெலங்கானாவில் காங்கிரஸ் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

 

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிஜோரம் மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தல்கள் நவம்பர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் 200, மத்தியப் பிரதேசத்தில் 230, சத்தீஸ்கரில் 90, தெலங்கானாவில் 119 மற்றும் மீசோரத்தில் 40 தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 30 ஆம் தேதி தெலங்கானா தேர்தல் நடந்து முடிந்ததும் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் கருத்துக் கணிப்பை வெளியிட்டன.

அப்போது ராஜஸ்தான் மாநிலம் மற்றும் மத்தியப் பிரதேச்த்தில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி மோதல் இருப்பதால் இழுபறி நிலை நீடிக்கிறது என்றும், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனவும், தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே மும்முனை போட்டி நிலவினாலும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

 

மிஜோரத்தில் மிஜோ தேசிய முன்னணி பின்னடைவை சந்திக்கும் என்றும் அங்கு புதிதாக உருவாக்கப்பட்ட ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் அங்குள்ள மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப வாக்கு எண்ணும் பணி திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை அடைந்தாலும், மக்களவைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 6 மாதங்களுக்கு குறைவாக உள்ள சூழ்நிலையில் பா.ஜ.க. ஐந்தில் மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. ராஜஸ்தானில் பா.ஜ.க. வெற்றி எதிர்பார்த்ததுதான். ஏனெனில் அங்கு 1993 முதல்  காங்கிரஸ், பா.ஜ.க. மாறிமாறி ஆட்சி செய்து வந்துள்ளன. வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து முதல்வர் அசோக் கெலோட் செய்த மாயாஜாலங்கள் பலிக்கவில்லை. அங்கு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்பினார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என்ற கனவில் காங்கிரஸ் இருந்தது. ஆனால், அங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மை பெரும் வகையில் 53 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே அங்கு பா.ஜ.க. ஆட்சி உறுதியாகிவிட்டது.

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றி கட்சித் தலைவர்களையும், தொண்டர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 2003 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இடையில் 2018 ஆம் ஆண்டில் 18 மாதங்களுக்கு ஆட்சியில் இல்லாமல் இருந்த்து. அங்கு 2018 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. கமல்நாத் முதல்வரானார். ஆனால், ஜோதிர் ஆதித்யா தலைம்மையில் 22 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தி பா.ஜ.க.வில் சேர்ந்ததை அடுத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க.வின் சிவஜாஜ் சிங் செளஹான் முதல்வரானார். ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியா, மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் செளஹான் மற்றும் சத்தீஸ்கரில் ரமன் சிங் போன்ற தலைவர்கள் இருந்தும் எவரையும் பிரதமர் மோடி, முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தவில்லை. இறுதி நிலவரப்படி ராஜஸ்தானில் பா.ஜ.க, 115 தொகுதியில் முன்னிலையில் உள்ளது ஆட்சியமைக்க 101 இடங்களே போதுமானது. காங்கிரஸ் 70 இடங்களிலேயே வென்றுள்ளது.

 

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 160 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகளில் பா.ஜ.க. 54 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு பி.ஆர்.எஸ். 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 46 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. எனவே  அங்கு காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது.

-

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com