சென்னை வியாசர்பாடியில் வாகன சோதனையில் சிக்கிய பல லட்ச ரூபாய் ஹவாலா பணம்!

சென்னை வியாசர்பாடியில் வாகன சோதனையில் சிக்கிய பல லட்ச ரூபாய் ஹவாலா பணம்!
Published on

சென்னை, வியாசர்பாடி ஏ.ஏ.சாலையில் நேற்று இரவு குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், ஒரு வாகனத்தில் கட்டுக்கட்டாகப் பணம் இருந்ததைத் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பணம் குறித்தும் அதற்கான ஆவணங்கள் குறித்தும் போலீசார் அவர்களிடம் விசாரித்து இருக்கிறார்கள். ஆனால், இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து இருக்கிறார்கள்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தில் இருந்து 31 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். அதோடு, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் ஒருவர் மாதவரத்தைச் சேர்ந்த 31 வயதான தேவராஜ் என்றும், இன்னொருவர் ராயபுரம் கல்மண்டபத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவரும் சென்னை பாரிமுனையில் செல்போன் கடை நடத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் உடனே வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். அதையடுத்து அவர்கள் இருவரும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 31 லட்ச ரூபாய் பணத்தைக் கொண்டு வந்த அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com