தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்து வரும் பத்து நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் பழனி நாடார் 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தபால் வாக்குகள் சரியாக எண்ணப்படாத காரணத்தால் தோல்வியை தழுவியதாக கூறிய அ.தி.மு.க வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தென்காசி தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 18 பேர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். 2 லட்சத்து 92 ஆயிரத்து 168 வாக்காளர்கள் கொண்ட தொகுதியில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 108 வாக்குகள் பதிவாகியிருந்தன.
நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டம் கடந்த முறை முதல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. இங்கு தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த முறை நடந்த தேர்தலில் கடும் போட்டி இருந்தது.
முதலில் தபால் மூலமாக பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது தொடங்கி, அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் இருவருமே மாறி, மாறி முன்னிலையில் இருந்தார்கள். வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணி முடித்தபோது அ.தி.மு.கவின் செல்வமோகன்தாஸ் பாண்டியனே முன்னிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தபால் ஓட்டுகள் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடாருக்கு கூடுதலாக 370 வாக்குகளை பெற்று தந்தன.
காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றியை எதிர்த்த அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் இருப்பதாக கூறி வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டுள்ளது. அடுத்து வரும் பத்து நாட்களில் மறு எண்ணிக்கையை முடிப்பதோடு, ஆட்சியரே முடிவையும் அறிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளளது. இரண்டு ஆண்டுகள் கழித்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை எண்ண முடியாத நிலை ஏற்பட்டால் மறு தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்க்ள. எது எப்படியோ, தென்காசிக்கு இடைத்தேர்தல் வராத வரை சரிதான்.