குற்ற உணர்வு உள்ளதால்தான் பிரதமர் மோடி மணிப்பூர் பற்றி பேச மறுக்கிறார்: லாலு பிரசாத்

லாலு பிரசாத், மோடி
லாலு பிரசாத், மோடி
Updated on

குற்ற உணர்வு உள்ளதால்தான் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் பேச மறுக்கிறார் என்று ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கி கிடப்பது குறித்தும் மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வர வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்தும் லாலு பிரசாத் யாதவிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மணிப்பூர் பற்றி பேச பிரதமர் ஏன் மறுக்கிறார் என்பது பற்றி கருத்து தெரிவித்த லாலு, மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தவறு செய்துள்ளார். குற்ற உணர்வு உள்ளதால்தான் அவர், நாடாளுமன்றத்தில் வந்து பேச தயக்கம் காட்டுகிறார் என்றார்.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மோடி வெளிநாட்டில் குடியேறிவிடுவார் என்று கூறியிருந்தது பற்றி லாலுவிடம் கேட்டதற்கு, “நான் என்ன நடக்குமோ அதைத்தான் கூறுகிறேன். பிலிப்பின் முன்னாள் அதிபர் பெர்டிணான்ட் மார்கோஸ் வெளிநாட்டுக்கு தப்பியோடியது போல பிரதமர் மோடியும் செய்வார்.

வெளிநாட்டில் அவர் குடியேறுவதற்கான இடம் காத்திருக்கிறது. எனவே அவர் மார்கோஸைப் போல வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துவிடுவார். அவர் ஏகப்பட்ட பாவங்களைச் செய்துள்ளார் என்றும் லாலு கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லாலு பிரசாத், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து பிரதமர் மோடிக்கு இப்போதே கவலை வந்துவிட்டது. தேர்தலில் வெற்றிபெறுவது சந்தேகமே என்று அவர் நினைக்கிறார். அதனால் வெளிநாட்டில் குடியேற அவர் திட்டமிட்டு வருகிறார் என்று தெரிவித்திருந்தார்.

ஊழல்வாதிகளும் வாரிசு அரசியல் நடத்துபவர்களும் சேர்ந்த கூட்டணிதான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி. அடுத்த தேர்தலுக்குப் பிறகு அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் லாலு கூறுகையில், மக்களவைத் தேர்தலுக்கு பின் நாங்கள் காணாமல் போய்விடுவோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். உண்மையில் அவர்தான் வெளிநாட்டில் குடியேறி திட்டமிட்டு வருகிறார். அதற்காகத்தான் அவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறார். எந்த நாட்டில் தனக்கு அனைத்து செளகரியங்களும் கிடைக்குமோ அங்கு தங்கிவிடுவார் என்றார் லாலு.

logo
Kalki Online
kalkionline.com