அற்பமான காரணங்களுக்காக ஆதிர் ரஞ்சன் செளதுரி இடைநீக்கம்!

ஆதிர் ரஞ்சன் செளதுரி
ஆதிர் ரஞ்சன் செளதுரி
Updated on

காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதுரி அற்பமான காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். நிரவ் மோடி என்று மட்டுமே அவர் கூறினார். ‘நிரவ்’ என்றால் அமைதி என்று அர்த்தமாகும் என்றும் கார்கே குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியதாகவும் அமைச்சர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி ஆதிர் ரஞ்சன் செளதுரி மக்களவையிலிருந்து வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் அவைத்தலைவர் மீதான நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்று காங்கிரஸ் கூறியது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செளதுரி, தாம் ஒருபோதும் பிரதமரை அவமதிக்கும் நோக்கில் பேசவில்லை, யாரையும் இழிவுபடுத்தும் வகையில் தாம் பேசவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் மவுனமாக இருக்கிறார் என்பதாலேயே அவர் அமைதியாக (நிரவாக) இருக்கிறார் என்று கூறினேன். அவரை இழிவுபடுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. பிரதமரேகூட தாம் இழிவுபடுத்தப்பட்டதாக உணரவில்லை. ஆனால், அவருடன் இருப்பவர்கள் நான் பிரதமரை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு என் மீது உரிமை மீறல் பிரச்னையை எழுப்பியுள்ளனர். என்னை இடை நீக்கம் செய்தது பின்னர்தான் தெரியவரும் என்றார் செளதுரி.

இதனிடையே மல்லிகார்ஜுன கார்கே, வெள்ளிக்கிழமையன்று மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கரிடம் ஜனநாயகத்தை காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆதிர் ரஞ்சன் செளதுரி, பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் இடம்பெற்றுள்ளதாகவும் இடைநீக்கத்தால் அவர் அதில் பங்குபெற முடியாமல் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அற்ப காரணங்களுக்காக செளதுரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செளதுரி பொதுக்கணக்குக்குழு, அவை அலுவல் குழு உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்களில் இடம்பெற்றுள்ளார். இடைநீக்கம் தொடர்ந்தால் அவர் இந்த குழுவில் இடம்பெற முடியாமல் போய்விடும். இது நல்ல தல்ல என்றும் கார்கே கூறினார்.

முன்னதாக செளதுரியை இடைநீக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கொண்டுவந்தார்.

ஆதிர் ரஞ்சன் தொடர்ந்து, அவையின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே அவை விதிகளை மீறி செயல்பட்டுவரும் அவர் மீது உரிமை மீறல்குழு விசாரணை நடத்தி அவையில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அதுவரை அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து செளதுரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

முன்னதாக பா.ஜ.க. உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து பிரதமர் மோடி மீது ஆதிர் ரஞ்சன் செளதுரி தெரிவித்த கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. பிரகலாத் ஜோஷி இது தொடர்பான ஒழுங்குப் பிரச்னையை கொண்டு வந்ததுடன் காங்கிரஸ் உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினார்.

logo
Kalki Online
kalkionline.com