
ஒரு சின்னத் தப்பு.. பெரிய பாடம்!
பள்ளிக்கூடத்துல பரீட்சையில ஒரு சின்னத் தப்புப் பண்ணாக்கூட மார்க் போயிடும். ஆனா இங்க, ஒரு சாதாரண எழுத்துப் பிழையால ஒருத்தரோட ₹50,000 மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரத்தாகி, பாலிசியும் கேன்சல் ஆச்சு.
ஆனா, அவர் சும்மா இருக்காம அதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டுப் போராடினார்.இந்தப் பரபரப்பான சம்பவம் முதன்முதலில் ரெட்டிட்டில் (Reddit) பகிரப்பட்டது.
இது இந்தியாவின் ஒவ்வொரு காப்பீட்டுதாரருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக உள்ளது. ஒரு சிறிய விடாமுயற்சி, சில ஆவணங்கள் மற்றும் சரியான வழிகளைப் பயன்படுத்தினால், எவ்வளவு பெரிய காப்பீட்டு நிறுவனமாக இருந்தாலும், நமக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.
பிரச்சனை தொடங்கிய கதை
செப்டம்பர் 2024-ல் பிரச்சனை ஆரம்பிச்சுது. மருத்துவமனை அளித்த டிஸ்சார்ஜ் அறிக்கையில் ஒரு சின்னத் தப்பு இருந்ததால, ₹50,000 மருத்துவக் காப்பீடு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதுக்கப்புறம், காப்பீடு எடுத்தவர் அந்தத் தப்பைச் சரிசெய்து, மருத்துவச் சான்றிதழையும் கொடுத்தார். ஆனாலும், கம்பெனி அதை ஏத்துக்க மறுத்துடுச்சு. இது போதாதுன்னு, மார்ச் 2025-ல அதே சின்னக் காரணத்தைச் சொல்லி, அவரோட பாலிசியையே ரத்து செஞ்சிட்டாங்க.
பல வருஷமா அவர் கட்டுன பிரீமியம் மொத்தமும் வீணா போச்சு. ஒரு நொடியில எல்லாமே தலைகீழா மாறிப்போச்சு.
போராட்டத்தின் வெற்றி
'ஆறின கஞ்சி... பழங்கஞ்சி'னு சொல்றது போல, நம்ம பாலிசிதாரர் உடனே புகார் கொடுக்காம, 2024 டிசம்பர் வரைக்கும் காத்திருந்தார். இதனால மாசக்கணக்குல எந்த அசைவும் இல்லை. ஆனா, அவர் சோர்வடையல. 2025 ஏப்ரல்ல IRDAI இணையதளத்தில் புதுசா ஒரு புகாரை பதிஞ்சார். அதுதான் இன்சூரன்ஸ் கம்பெனியை உலுக்கி எடுத்தது.
ஜூன் மாசம் நடந்த ஆன்லைன் விசாரணை வெறும் அஞ்சே அஞ்சு நிமிஷம்தான். ஓம்புட்ஸ்மேன் கேட்ட கேள்விக்கு கம்பெனி ஆளால பதில் சொல்ல முடியலை.
தீர்ப்பு ரொம்பத் தெளிவு: "பணத்தைக் கொடுங்க, பாலிசியை உடனே மீட்டுக் கொண்டு வாங்க."
கடைசி கட்டப் போராட்டம்
ஜூலை மாத நடுப்பகுதியில் ₹50,000 காப்பீட்டுத் தொகை கிடைத்தது. ஆனால், பாலிசியை மீண்டும் செயல்படுத்துவதில் கம்பெனி காலதாமதம் செய்தது.
ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் IRDAI இணையதளத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது.
இதுதான் கம்பெனியை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வைத்தது. ஆகஸ்ட் 20-ல், பாலிசி மூன்று நாட்களுக்குள் மீண்டும் செயல்பட்டு, அனைத்துப் பலன்களும் கிடைக்கும் என உறுதி செய்தனர்.
நமக்குக் கிடைக்கும் பாடம்
இந்தச் சம்பவம் நமக்கு ஒண்ணை நிரூபிக்குது: இன்சூரன்ஸ் கம்பெனிகளை எதிர்க்க முடியாதுன்னு சொல்றது தப்பு.
நமக்குச் சட்டம் தெரியும், அதுக்கான அமைப்புகள் தெரியும்னா, எவ்வளவு பெரிய கம்பெனியா இருந்தாலும் நாம ஜெயிக்கலாம்.
இன்சூரன்ஸ் ஓம்புட்ஸ்மேன் மற்றும் IRDAI வெப்சைட் வெறும் பெயர் பலகை இல்லை. அது நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பலமான ஆயுதம்.
கோடிக்கணக்கான இந்தியர்கள் வருஷா வருஷம் பிரீமியம் கட்டிட்டு இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் இந்தச் சம்பவம் ஒரு பெரிய பாடம்.
மருத்துவக் காப்பீடு எடுக்கிறதுக்கு முன்னாடி, இதுல சிக்கல் இல்லாம இருக்காதுன்னு புரிஞ்சுக்கணும்.
ஆனா, சரியான முறையில, விடாமுயற்சியோட போராடினா, இந்தச் சட்டமே நமக்காக வேலை செய்யும்.