தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ,நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாம்பழங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு பருவம் வந்ததும் பறித்து விற்பனை செய்யப்படுகிறது .இந்தப் பழங்கள் விற்பனைக்காக உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கூட அனுப்பப்பட்டு வருகிறது.
பெரிய அளவில் இருக்கக்கூடிய, சற்று காய் நிலையில் உள்ள பழங்களைப் பறித்து அவற்றை இயற்கை முறையில் பழுக்க வைப்பது தான் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக எங்கும் கலப்படங்கள் பெருகி விட்ட சூழலில் இந்த இயற்கையால் விளையும் கனிக்கும்ஆபத்து வந்தது. ஆம், கால்சியம் கார்பைட் என்னும் ரசாயன கற்கள் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அதிக அளவிலான பழங்கள் அந்த முறையில் பழுத்து நம் கைகளுக்கு வருகிறது.
ஆனால் இவ்வாறு செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பவர்களுக்கு ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் ஆகியவை ஏற்படுகிறது. தொடர்ந்து இது போன்ற பழங்களை உண்பதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால் ஆபத்து தரும் இந்த முறையற்ற கலப்படத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் மற்றும் சக வியாபாரிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு சென்றது.
இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை சேலம் மாவட்ட நியமன அருளாளர் கதிரவன் தலைமையில் மாநகரில் பல்வேறு இடங்களில் மாம்பழ குடோன்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஒரு சில கடைகளில் இரசாயனத்தை நேரடியாக பழங்களில் தெளித்து அவற்றை செயற்கை முறையில் பழுக்க வைப்பது தெரியப்படுத்தப்பட்டது. இந்த வகையில் சுமார் 100 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர் மேலும் இதனை தடுக்கும் வகையில் மாம்பழம் மொத்த வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடந்தது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்களினால் நமக்கு என்னென்ன தீங்கு நேரம் என்பதை குறித்தும் இயற்கை முறையில் பழக்க வைக்கப்படும் பழங்களின் நன்மை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் கூறும் போது,
“சேலம் மாநகரில் உள்ள 25 மொத்த வியாபாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் பழங்களை வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும். செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களில் சுவை மாறுபடுவதுடன் அதன் மணம் மற்றும் நிறமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். மேலும் பழங்கள் மீது கருப்பு நிற வட்டம் காணப்படும். இவைகள் விரைவில் அழுகியும் விடும். பழத்தின் மேல் பகுதி ஆரஞ்சு நிறத்திலும் உள்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும் பழத்தை அறுக்கும்போது சொரசொரவென சத்தம் கேட்கும். பழம் பழுத்த மாதிரி தெரியும். ஆனால் கெட்டி ஆக இருக்கும். இயற்கை முறையில் பழம் பழுக்க ஐந்து முதல் ஏழு நாட்களாகும். செயற்கை முறையில் பழுக்க வைத்த பழம் இரண்டு முதல் மூன்று நாட்களில் பழுத்து விடும். செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பதால் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று எரிச்சல் ஏற்படும். இப்படியே தொடர்ந்து உண்பதால் கடைசி கட்டத்தில் புற்றுநோய் கூட வரலாம். வியாபாரிகள் செயற்கை முறையில் பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் பழங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின்படியும் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைப்பது கண்டறிந்தால் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று மக்களுக்கு விழிப்புணர்வையும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கையையும் தந்தார்.
மனசாட்சி அற்ற மனிதர்களின் பேராசையால் இயற்கை தரும் பழங்களைக்கூட அச்சத்துடன் உண்ணும் நிலைதான் நமக்கு. காலம்தான் மாற்ற வேண்டும் இவர்களை. அதுவரை நுகர்வோராகிய நாம்தான் நல்லது கெட்டதை பகுத்து வாங்க வேண்டும்.