
அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் டேனியல் நரோடிட்ஸ்கி காலமான செய்தியைக் கேட்டு தான் ஆழ்ந்த மனவேதனை அடைந்ததாகவும், இனிமேல் அவரது செஸ் சவால்களைப் பார்க்க முடியாது என்பதை நம்புவதற்கே கடினமாக இருப்பதாகவும் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரக்ஞானந்தாவின் வேதனை
29 வயதான நரோடிட்ஸ்கியின் திடீர் மறைவு குறித்த அறிவிப்பை, சார்லோட் செஸ் சென்டர் மூலம் அவரது குடும்பத்தினர் சமூக ஊடகமான 'எக்ஸ்' (X)-இல் வெளியிட்டனர்.
பிரக்ஞானந்தா தனது இரங்கல் செய்தியில்,
"தானியாவின் (டேனியலின் செல்லப் பெயர்) மறைவு குறித்துக் கேள்விப்பட்டதில் நான் மிகவும் துயரமடைகிறேன். நான் செஸ்.காம் (Chess.com) தளத்தில் உள்நுழையும்போதெல்லாம், என்னுடன் ஒரு ஆட்டம் ஆடுவதற்கான அவரது சவாலை நான் பார்ப்பேன். அதை என்னால் இனி பார்க்க முடியாது என்பதை நம்புவது கடினம். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
சான் ஜோஸ் இல்லத்தில் மறைவு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில், நரோடிட்ஸ்கி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அதிகாரிகள் அவரது மரணத்திற்கான அதிகாரப்பூர்வக் காரணத்தை இன்னும் வெளியிடவில்லை.
இருப்பினும், முதற்கட்ட அறிக்கைகளின்படி, இதில் சதித் திட்டத்திற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
செஸ் உலகில் ஆழமான பங்களிப்பு
நரோடிட்ஸ்கி செஸ் உலகிற்கு ஆற்றியப் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.
அவர் 2007 ஆம் ஆண்டில் ஃபிடே மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டில் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பின் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றார்.
2013 ஆம் ஆண்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றார். மே 2017 இல் அவரது அதிகபட்ச ஃபிடே கிளாசிக்கல் மதிப்பீடு 2647 ஆக இருந்தது.
14 வயதிலேயே அவர் 'மாஸ்டரிங் பொசிஷனல் செஸ்' என்ற செஸ் குறித்த நூலை வெளியிட்டார்.
செஸ் விளையாட்டு அரங்கிற்கு வெளியே, நரோடிட்ஸ்கி ஆன்லைனில் செஸ் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
தொழில்முறை மற்றும் அமெச்சூர் வீரர்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்கும் பாலமாக அவர் திகழ்ந்தார்.
அவர் மிகவும் பிரபலமான ட்விட்ச் (Twitch) மற்றும் யூடியூப் சேனல்களையும் நடத்தி வந்தார்.
அமைதியாகவும் எளிமையாகவும் செஸ் விளையாட்டை அனைத்து மட்ட வீரர்களுக்கும் விளக்கும் அவரது திறன் பெரிதும் பாராட்டப்பட்டது.