ஈரானில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டு அரசு குடிமக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு நாளைக்கு 130 லிட்டருக்கு மேல் தண்ணீர் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மத்திய ஆசிய நாடான ஈரான், பல ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வறட்சி வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. இதனால், தலைநகர் டெஹ்ரான் உட்பட நாட்டின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தண்ணீர் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்துள்ளது.
ஈரானில் தற்போது 90 சதவிகித அணைகள் வறண்டு போய்விட்டன. மேலும் ஈரானின் முக்கிய இடங்களில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தெஹ்ரானுக்குத் தண்ணீர் வழங்கும் கராஜ் அணை தற்போது 6% திறன் மட்டுமே செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஈரான் எரிசக்தி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 130 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவை மீறி தண்ணீர் பயன்படுத்தும் வீடுகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும். பின்னர், அவர்களின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதைய நீர் நெருக்கடிக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, குடிநீரை வீணடிப்பது, தோட்டங்களுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, கார் கழுவுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே தண்ணீர் பயன்படுத்த வேண்டும்." என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
வறட்சியின் தாக்கம் ஈரானின் விவசாயத் துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து, விலைவாசி உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் அச்சமும், அதிருப்தியும் நிலவி வருகிறது.
மேலும் இந்த அறிவிப்பு குறித்து தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் நீரியல் பேராசிரியர் ஒருவர் பேசுகையில், “ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 190 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆகையால், அரசங்காத்தின் இந்த அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமே இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.