உத்தராகண்ட் மாநிலத்தில் 53 பேருடன் சென்ற பேருந்து ஆற்று வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடமாநிலங்களில் கனமழை பெய்து கொண்டே இருப்பதால் ஆங்காங்கே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பாரபங்கி மற்றும் கோண்டா உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடரால் திங்கட்கிழமை அன்று 9 பேர் பலியான நிலையில், நேற்று இருவர் உயிரிழந்தனர்.
இந்த கனமழையால் 150க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கோராபுட், மல்கங்கிரி, கந்தமால், நபரங்பூர் மற்றும் கலஹண்டி ஆகிய இடங்களில் 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் சாலைகள் நீரில் மூழ்கியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஹரித்வாரில் கங்கை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. இதனால், பேருந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் பேருந்தில் இருந்த 53 பேரையும் கயிறு கட்டி மீட்டனர்.
உத்தரகாண்டில் கடந்த 48 மணி நேரத்தில் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் 100 மிமீ மழை பெய்துள்ளது, மேலும் 10 மாவட்டங்களில் 50 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பஹ்ரைச் மற்றும் பாரபங்கி பகுதிகளில் 250 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.