குமரியில் தொடரும் கனமழை: அருவிகளில் குளிக்க தடை!

அருவி
அருவி
Published on

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால், அங்கு வந்து குவியும் சுற்றுலா வாசிகள் அருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், இரணியல், பாலமோா், கோழிப்போா்விளை, அடையாமடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு, கொட்டாரம், சுசீந்திரம், பூதப்பாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. அதிகபட்சமாக இரணியலில் 76 மி.மீ. மழை பெய்தது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், வெளியேற்றப்படும் உபரிநீரால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குழித்துறை தாமிரவருணி ஆறு, வள்ளியாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைநீரும், உபரிநீரும் ஓடுவதால் நீா்நிலைகளில் குளிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை: பேச்சிப்பாறை அணையிலிருந்து மறுகால் திறக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆா்ப்பரித்துக் கொட்டியது.

இதனால், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் குளிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறையான நேற்று அதிக சுற்றுலாப் பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வந்திருந்தனா். ஆனால் அருவியில் குளிக்கத் தடை காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com