அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை பனி புயல் பதிப்பாக 16 பேர் பலியாகியுள்ளனர். இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்து போனது.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவு வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெப்பநிலை மைனஸ் 48 டிகிரி செல்சியசியாக உள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுங்குளிர் வாட்டி வருவதால் மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். பொதுமக்கள் வெளியே செல்லமுடியாததால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளது. கடைகள், மால்கள், வணிக நிறுவனங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏழு லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கடும் பனியில் சுமார் 20 கோடி மக்கள் சிக்கியுள்ளனர். நியூயார்க்கின் ஹம்பர்க்கில் மின்கம்பியின் மீது வாகனம் விழுந்ததால் சுமார் 4 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. வாட்டி வதைக்கும் குளிரில் மின்சாரம் இல்லாதததால் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
தொடர்ந்து அதிகளவில் பனி பொழிந்து வருவதால், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பேருந்தின் மூலம் மட்டுமே நீண்ட நேரம் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாள் மட்டும் 2,270 விமானங்கள் ரத்தாகியுள்ளன. பலரும் விமான நிலையங்களில் முடங்கி கிடக்கின்றனர். தொடர் பனிப்பொழிவு, இடைவிடாத மழை மற்றும் குளிர் காற்று காரணமாக, அமெரிக்கா முழுவதும் விமானப் பயணம் தவிர, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.