2.72 கோடிக்கு ஏலம்போன ஹெல்மெட்! அப்படி என்னதான் ஸ்பெஷல்?

2.72 கோடிக்கு ஏலம்போன ஹெல்மெட்! அப்படி என்னதான் ஸ்பெஷல்?

மொனாகோ நாட்டைச் சேர்ந்த ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் சார்லஸ் லெக்லெர்க்கின் ஹெல்மெட் இந்திய ரூபாய் மதிப்பில் 2.72 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது உலகளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

அப்படி இந்த ஹெல்மெட்டில் என்னதான் ஸ்பெஷல் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். ஆனால், 2.72 கோடிக்கு ஏலம் போன ஹெல்மேட் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, அந்த ஹெல்மேட் யாருக்குச் சொந்தமானது, அவர் யார், என்ன சாதனைகள் செய்துள்ளார்? எதனால் அந்த ஹெல்மேட் இத்தனை கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது? வெறும் ஹெல்மேட் மட்டும் ஏலம் எடுக்கப்பட்டதா அல்லது வேறு என்னவெல்லாம் ஏலம் விடப்பட்டது? என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள நமக்கெல்லாம் நடிகர் அஜித்தால்தான் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் என்பது மிகவும் முக்கியமான விளையாட்டாகும். அப்படிப்பட்ட ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் உலகளவில் முன்னணியில் இருக்கும் நபர்தான் கார் பந்தய வீரரான சார்லஸ் லெக்லெர்க். இவரின் குடும்பமே ஃபார்முலா கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களைக் கொண்டது. இதனால் சிறுவயதிலிருந்து கார் பந்தயம் என்பது சார்லஸ் லெக்லெர்க்கு சைக்கிள் ஓட்டுவது போன்றது. அதனால் சிறுவர்களுக்கான கார் பந்தய போட்டிகளில் தன்னுடைய 8 வயதில் கலந்துகொண்டு 2005,2006, 2008 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் French Cadet Champion போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார் சார்லஸ் லெக்லெர்க்.

அதன்பிறகு KF3 எனப்படும் ஜூனியர் கார் பந்தயங்களில் கலந்துகொள்ள தொடங்கிய சார்லஸ் 2010ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகப் பட்டங்களை வாங்கி குவித்தார். இதன்காரணமாக அவருக்கு Nicolas Todts எனும் கார் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய முன்வந்தது. அதன்பிறகு ஐரோப்பாவில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயங்களில் வென்று உலகளவில் கவனம் பெறத் தொடங்கினார். இதன்பின்னர் 2014ம் ஆண்டிலிருந்து ஃபார்முலா கார் பந்தயங்களில் கலந்துகொள்ளத் தொடங்கிய சார்லஸ் லெக்லெர்க் Formula Renault 2.0 Alps போட்டியில் 2வது இடத்திலும், 2016ல் நடைபெற்ற GP3 Series போட்டியில் முதலிடத்திலும், 2017ம் ஆண்டு நடைபெற்ற ஃபார்முலா 2 பந்தயத்தில் முதலிடத்தையும் பெற்றார். 2017ம் ஆண்டிலிருந்து தற்போதுவரை தொடர்ச்சியாக ஃபார்முலா கார் பந்தயத்தில் கலந்துகொண்டுவரும் சார்லஸ் லெக்லெர்க் 2018ல் 13வது இடத்திலும், 2019ல் 4வது இடத்திலும், 2020ல் 8வது இடத்திலும், 2021ல் 7வதாகவும் 2022ம் ஆண்டு 2வது இடத்திலும் 2023ம் ஆண்டு 7வது இடங்களைப் பிடித்து ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் முன்னணி வீரராக உள்ளார்.

சரி இப்போது 2.72 கோடிக்கு ஏலம் போன ஹெல்மேட்டின் உரிமையாளர் பற்றி தெரிந்துகொண்டோம். ஆனால், எதற்காக அவரின் ஹெல்மேட் ஏலம் விடப்பட்டது என்பதை தற்போது தெரிந்துகொள்வோம். இத்தாலி நாட்டில் கடந்த மே மாதம் தொடர்ந்து 15 நாட்கள் பெய்த கடும் மழையால் அந்நாடே வெள்ளக்காடானது. கடும் வெள்ளத்தால் அந்நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, எமிலியா-ரோமக்னாவ எனும் பகுதியில் மட்டும் 14 பேர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தனர். மேலும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடு, உடைமைகள் என அனைத்தையும் இழந்தனர். மேலும், எமிலியா-ரோமக்னாவ பகுதியில் நடைபெற இருந்த ஃபார்முலா ஒன் பந்தயமும் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து ஃபார்முலா ஒன் கார் பந்தய குழுவினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமிலியா-ரோமக்னாவ பகுதி மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். இதனையடுத்து, ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் உடைகள், ஷூக்கள், ஹெல்மேட் என பல பொருட்கள் ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அப்போது முன்னணி வீரரான சார்லஸ் லெக்லெர்க்கின் ஏலம் விடப்பட்டபோது அவரின் ஹெல்மேட் இந்திய ரூபாய் மதியில் 2.72 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. அதேபோல் சார்லஸ் லெக்லெர்க்கின் கார் பந்தய உடை 44 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் ஷூக்கள் 14 லட்சத்திற்கும் கையுறைகள் 30 லட்சத்து 83 ஆயிரத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் லெக்லெர்க்கின் உடைமைகள் அனைத்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கார் பந்தய வீரர் ஒருவரின் ஹெல்மெட் அதிக விலைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறை. அதேபோல், ஏலம் தொகை அனைத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு அளிக்கப்படவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com