மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இதில் கேரள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல்கள் நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தங்களுக்கு ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு போதிய வசதிகள், தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் அளித்து வருவதும், ஒத்துழைப்பு கொடுக்காத நடிகைகளை சூட்டிங் ஸ்பாட்டில் அவமானப்படுத்துவது, கழிவறை கூட ஒதுக்காமல் இருப்பது உட்பட பல அவமரியாதைகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்த கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியான நாள் முதல் மலையாள திரையுலகம் பரபரப்பாகி போனது.
'குற்றம் சாட்டுபவர்கள் சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்கு பின்னர் அது குறித்து புகார்கள் தெரிவிக்கும் போது, திரையுலக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கும் நடிகர்கள், தாங்கள் என்ன செய்தோம் என்பதை மறந்திருக்கலாம்; அல்லது மறந்தது போல் நடிக்கலாம். மேலும் தங்களை பழிவாங்குவதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும் கூறலாம். ஆனால் எந்த பெண்ணும் இது போன்ற விஷயத்தில் அவ்வாறாக நடந்து கொள்ள மாட்டார். நாம் இப்போது தப்பு செய்து மாட்டிக் கொள்ளாவிட்டாலும், என்றாவது ஒருநாள் தண்டனை கிடைத்தே தீரும்' என்பதை ஹேமா கமிட்டி அறிக்கை நிரூபித்துக் காட்டியுள்ளது.
இந்நிலையில் நடிகர், இயக்குனர் மற்றும் கேரள மாநில கலா சித்ரா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது மேற்குவங்க நடிகை ஸ்ரீ லேகா மித்ரா பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒன்றில் நடிக்க ரஞ்சித் அழைத்தார். அப்போது என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதனால் அந்தப் படத்தில் இருந்து நான் விலகி விட்டேன். எனக்கு நேர்ந்த கொடுமை மோசமான அனுபவம் குறித்து வெளிப்படுத்த எனக்கு உரிமை உள்ளது. அதனால் யாராவது எனக்கு உதவினால், புகார் அளிக்க தயார். மேலும் நடிகர் ரஞ்சித் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என லேகா மித்ரா கூறியிருந்தார். நடிகையின் குற்றச்சாட்டை தொடர்ந்து நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில டிஜிபி இடம் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள கலா சித்ரா அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் ரஞ்சித் ராஜினாமா செய்துள்ளார்.
இதே போல மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா) பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி பாலியல் புகார் தெரிவித்தார். இதனை அடுத்து பொதுச் செயலாளர் பதவியை சித்திக் நேற்று ராஜினாமா செய்தார். அதன் கடிதத்தை தலைவர் நடிகர் மோகன்லால் இடம் வழங்கினார்.
இந்நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நடிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் ஏழு பேர் கொண்ட குழுவை கேரளா அரசு நேற்று அமைத்தது. மேலும் கேரள முதல்வர் அலுவலகம் சார்பில், ஹேமா கமிஷனில் சொல்லப்பட்டுள்ள நடிகைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் குறித்து விசாரிக்க ஐஜி பர்ஜன் குமார் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் விசாரணையை ஏடிஜிபி வெங்கடேஷ் மற்றும் நான்கு பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் மேற்பார்வையிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.