100 வயதில் காலமான அமெரிக்காவின் ராஜதந்திரி.. யார் இந்த ஹென்றி கிஸ்ஸிங்கர்?

ஹென்றி கிஸ்ஸிங்கர்
ஹென்றி கிஸ்ஸிங்கர்

மெரிக்க முன்னாள் ராஜதந்திரியும், அமெரிக்க அரசின் அதிகார மையமாக விளங்கியவரும், இரண்டு அதிபர்களின் கீழ் பணியாற்றியவரும், வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் முத்திரை பதித்தவரும் சர்ச்சைகிடமான வகையில் நோபல் அமைதிப் பரிசு வென்றவருமான ஹென்றி கிஸ்ஸிங்கர் புதன்கிழமை தமது 100 வது வயதில் காலமானார்.

ஹென்றி கிஸ்ஸிங்கர், கன்னெக்டிகட்டில் உள்ள தமது இல்லத்தில் காலமானதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

நூறு வயது ஆனாலும் வெள்ளை மாளிகை கூட்டங்களில் கலந்துகொள்வதும், தலைமைத்துவ பண்புகள் தொடர்பான புத்தகங்களைவெளியிடுவது, வடகொரியாவால் முன்வைக்கப்பட்ட அணுசக்தி அச்சுறுத்தல் குறித்த செனட் குழு கூட்டத்தில் நடந்த விவாத்ததில் பங்கேற்பது என கிஸ்ஸிங்கர் சுறுசுறுப்பாகவே இருந்தார். இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிரடியாக பெய்ஜிங் சென்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.

1970-களில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ரிச்சர்டு நிக்ஸன் அதிபராக இருந்தபோது, அவரின் கீழ் வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றியபோது பல சர்வதேச நிகழ்வுகளுக்கு காரணமாக இருந்தார். சீனாவுடனான ராஜீய உறவு, அமெரிக்கா-சோவியத் யூனியன் இடையே ஆயுதக்கட்டுப்பாட்டு பேச்சு, இஸ்ரேல், அரபு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவது, வடக்கு வியட்நாமுடனான பாரிஸ் அமைதி ஒப்பந்தம் என பல நிகழ்வுகளுக்கு வழிவகுத்தவர் கிஸ்ஸிங்கர்.

1974 ஆம் ஆண்டு நிக்சன் பதவி விலகியபோதிலும் அடுத்து வந்த அதிபர் ஜெரால்டு போஃர்டின் கீழ் தொடர்ந்து ராஜதந்திராயாக பணியாற்றினார். வாழ்நாள் முழுவதும் வலுவான கருத்துக்களை வழங்கிவந்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சிறந்த ராஜதந்திரியாகவும் அவர் பணியாற்றினாலும், அவரை சிலர் போர் குற்றவாளி என சாடிவந்தனர்.

1973 ஆம் ஆண்டில் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு, வியட்நாமின் லீ டக் தோவுடன் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை தேர்ந்தெடுத்த குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பதவி விலகினர்.

ஹென்றி ஆல்ஃபிரட் கிஸ்ஸிங்கர் ஜெர்மனியில் பர்த் என்னுமிடத்தில் 1923 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி பிறந்தவர். பின்னர் 1938 இல் அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. 1943 இல் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றார். இரண்டாம் உலகப் போரின்போது ஐரோப்பிய ராணுவத்தில் பணியாற்றினார். பின்னர் 1952 இல் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்தார்.

1954 இல் முனைவர் பட்டம் பெற்றார். ஹார்வார்டு பல்கலையில் 17 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நேரம் கிடைத்த போதெல்லாம் அமெரிக்க அரசுக்கு ஆலோசனை கூறிவந்த அவர், பின்னர் அமெரிக்க அரசில் பணியாற்றி நிக்சன் அதிபரானபோது தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.

நிக்சனுக்கு பிறகு அதிபர் ஃபோர்டு காலத்திலும் அவரது ஆதிக்கம் தொடர்ந்தது. எனினும் அடுத்து வந்த அதிபர் ஜிம்மி கார்டர் (1976) மற்றும் அதிபர் ரொனால்டு ரீகன் இருவரும் நிக்ஸனை எட்டியே வைத்திருந்தனர். அரசு பதவி போனபின் கிஸ்ஸிங்கர் பல்வேறு கார்ப்பொரேட் நிறுவனங்களுக்கு ஆலோசனை கூறும் நிறுவனத்தை நடத்திவந்தார். புத்தகங்கள் எழுதுவதிலும், சர்வேதச விவகாரங்கள் குறித்தி கருத்து கூறுவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.

ஹென்றி கிஸ்ஸிங்கர், தனது முதல் மனைவி ஆன் பிளெஷரை 1964 இல் விவகாரத்து செய்துவிட்டு நியூயார்க் மாகாண ஆளுநர் நெல்சன் ராக்ஃபெல்லருக்கு உதவியாளராக இருந்த நான்சி மாக்னஸ்ஸை 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவி மூலம் அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com