மதிய உணவுத்திட்டத்தின் படி இனி பள்ளி குழந்தைகளுக்கு சிக்கனும், பழங்களும் வழங்கப்போவதாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது.
அடுத்து வரும் நான்கு மாதங்களுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்குப் பின்னர் திட்டத்திற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து, தொடர இருப்பதாகவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
372 கோடி ரூபாயை திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளுக்கும் கூடுதலாக இருபது ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மதிய உணவுத்திட்டம் என்பது மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து நடத்தும் திட்டம் என்பதால் கூடுதல் தொகையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்தான் முதல்முதலாக மதிய உணவுத்திட்டத்தில் முட்டை சேர்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் வேகவைத்த முட்டை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மதிய உணவில் முட்டையும் இடம்பெற ஆரம்பித்தது.
மேற்கு வங்கத்து அரசுப் பள்ளிகளில் மதிய உணவில் முட்டை சேர்ப்பது பத்தாண்டுகளுக்கு முன்னர்தான் ஆரம்பமானது. மூன்றாண்டுகளுக்கு முன்னர் மதிய உணவில் மீன் சேர்க்கப்படும் என்று மம்தா அரசு அறிவித்தபோது, பா.ஜ.கவினரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
பா.ஜ.கவின் நிலைப்பாடு மேற்கு வங்கத்து மக்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மீனை தவிர்ப்பது என்பதை அவர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனாலும், மேற்கு வங்கத்து பா.ஜ.கவினர் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள். சில வாரங்களிலேயே மம்தா அரசு, மீன் அளிக்கும் திட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது. அதற்குக் காரணம், பா.ஜ.கவினரின் எதிர்ப்பு அல்ல.
மீன் சமைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அதற்கான நிதி ஒதுக்குவது போன்ற விஷயங்களில் சிக்கல் இருந்ததால் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. மீனை விட சிக்கனுக்கு ஆகும் செலவு குறைவு என்பதால் திட்டத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார்கள். கிராமப்புற பகுதிகளில் மீன்களை விட சிக்கனுக்கு அதிக வரவேற்பு என்பதால் இம்முறை சிக்கன் அளிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.
திடீரென்று சிக்கனை அறிமுகப்படுத்தும் மம்தா அரசின் முடிவுக்கு இன்னொரு காரணத்தையும் குறிப்பிடுகிறார்கள். சமீபத்தில் 17 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை மாநில அரசு பறிமுதல் செய்திருக்கிறது.
வசதி படைத்தவர்கள் பலர் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன்களை பெற்று வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சரிசெய்யவே சிக்கன் அறிவிப்பு வந்திருப்பதாக பேசிக்கொள்கிறார்கள். எது உண்மையோ?