கணவரைக் காப்பாற்ற கரடிகளை கோடாரியால் அடித்து விரட்டிய வீரப்பெண்.

கணவரைக் காப்பாற்ற கரடிகளை கோடாரியால் அடித்து விரட்டிய வீரப்பெண்.
Published on

ணவன் மனைவிக்குள் யாரேனும் ஒருவருக்கு ஆபத்து நேர்ந்தால் உடனே அவரைக் காப்பாற்ற அடுத்தவர் முயல்வது இயற்கை. ஆனால் விலங்குகள் எனும்போது அச்சத்துடன் இருக்கும் அந்த நேரத்தில் சாதுர்யமாக அவற்றை எதிர்த்து விரட்ட அதிகபடியான வீரமும் துணிவும் வேண்டும். கர்நாடக மாநிலத்தில் தாக்கிய கரடிகளை கோடாரியால் விரட்டி கணவரையும் சகோதரரையும் மீட்ட வீரப் பெண்ணான ஷப்னாவின் துணிவு போல.
      கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள சிக்காவி தாலுகாவின் முண்டகோடா கிராமத்தை சேர்ந்தவர் பஷீர் ஷாப் சவதத்தி. இவரது மனைவி ஷபீனா. இவர் கோணங்கேரி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். பாசனகட்டி பகுதியில் உள்ள இவர்களது விளைநிலம் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை பஷீர் ஷாப் சவதத்தியும். அவரது மனைவி ஷபீனாவும் தங்களது விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவரது தோட்டத்திற்குள் இரண்டு பெண் ஒரு ஆண் கரடிகள் புகுந்ததைப் பார்த்ததும் பஷீர் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் மூன்று கரடிகளும் அவரைத் தாக்கியுள்ளன. அவரால்  கரடிகளிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

      பஷீரின் அலறல் சத்தம் கேட்டு  பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியான சகோதரரான ரஷாக் நலபாண்டா  என்பவர் அங்கு ஓடி வந்து கரடிகளை விரட்டி  பஷீரை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால்  அவரையும் விடாமல் கரடிகள் தாக்கின. இதில் கரடிகள் பஷீர் ஷாப் சவதத்தியை கொடூரமாக தாக்கியுள்ளன. இதைப் பார்த்த அதிர்ச்சியில் முதலில் செய்வதறியாது நின்ற ஷபீனா கணவரைக் காப்பாற்ற  தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அங்கிருந்த கோடாரியால் கரடிகளை தாக்கினார். இதில் ஒரு கரடியின் தலையில் பலத்த  காயம் ஏற்பட்டது.

     காயமடைந்த கரடியைப் பார்த்த மற்ற  கரடிகள் பின்வாங்கி  தாக்குதலை நிறுத்தி அவர்களை விட்டு விட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் காயமடைந்த கரடியுடன் தப்பி ஓடிவிட்டன. இதையடுத்து கரடிகள் தாக்கியதில் காயம் அடைந்த இரண்டு பேரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு  அப்பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தார் ஷபீனா. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

     இந்த நிலையில் ஷபீனா தாக்கியதில் பலத்த காயமடைந்த கரடி நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியினுள் இறந்த நிலையில் கிடந்தது. இதை குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று செத்துப்போன கரடியை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்த பின் அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் ஷபீனாவிடமும்  அவரது கணவரிடமும் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கணவரைத் தாக்கிய கரடிகளை கோடாரியால் தாக்கிப் பெண்  விரட்டி அடித்த சம்பவமும் அதில் ஒரு கரடி செத்துப் போனதும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

      புராணகாலத்தில் எமனிடமிருந்து கணவனை மீட்கப் போராடிய சாவித்திரி போல இந்தக் கலிகாலத்தில் கரடிகளிடமிருந்து கணவனை மீட்ட ஷபீனா  பெண்களின் தைரியத்திற்கு ஒரு சான்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com