மாற்றுப் பாதையில் ராமநவமி ஊர்வலத்தை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுப் பாதையில் ராமநவமி ஊர்வலத்தை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அதன் அறங்காவலர் பிரபு என்பவர் நாளை ராமநவமி ஊர்வலத்தை ஜார்ஜ் டவுன் கோரல் மெர்ச்சண்ட் தெருவிலிருந்து பெரம்பூர் பட்டாளம் வரை நடத்த அனுமதிக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் விண்ணப்பித்து மனு கொடுத்திருந்தார். ஆனால், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகளவில் இயங்கக்கூடிய பகுதியாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளதாகவும் பிற மதத்தினர் அதிகளவில் வசித்து வருவதால் மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுவின் மீது முடிவெடுத்து ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க உத்தரவிட வேண்டுமென இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு ஒன்று வைக்கப்பட்டது. அதோடு, இந்த ஊர்வலத்தில் ஐம்பது பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்பதால் அமைதியாக முறையில் ஊர்வலம் நடத்தப்படும் எனவும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை எனவும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாகவும், கடந்த 2015ம் ஆண்டு முதல் ராமநவமி நாளன்று ராமரின் உருவப்படத்துடன் ஊர்வலம் நடத்தி வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, ‘கடந்த 2015-16ம் ஆண்டுகளில் ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கியதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை’ எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘இந்த ஊர்வலத்துக்கு அனுமதி கோரி கடந்த மாதமே மனு கொடுத்ததாகவும், நாளை காலை ராம நவமி கொண்டாட உள்ள நிலையில், அனுமதி மறுத்து இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளது, வேண்டுமென்றே தாமதிக்கும் செயல்’ எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, மாற்று வழியில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி புதிய மனுவை அளிக்குமாறு பாரத் இந்து முன்னணி தரப்புக்கும், அந்த மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்க காவல்துறை தரப்புக்கும் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.

logo
Kalki Online
kalkionline.com