கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றபோது, ஏற்பட்ட பிரச்னையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது, கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், கரூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கரூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த முன் ஜாமீன் மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வழக்குகளிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தவிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி, ஒரு வாரத்தில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீனை பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு ஆஜரானது குறித்து ஜூலை 20ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.