#BREAKING : தமிழக கோயில்களில் விஐபி தரிசனத்திற்காக தனி நேரத்தை ஏன் ஒதுக்க கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Chennai High court About VIP dharsion
Chennai High court image credit: Live law
Updated on

அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக கடவுளை காத்திருக்க வைக்கக்கூடாது என்றும், விஐபி தரிசனத்திற்காக கோவில் நடைமுறைகளில் தனிநேரம் ஏன் ஒதுக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் வருகைக்காக கடவுளை காத்திருக்க வைக்கக்கூடாது எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடவுளின் முன் அனைவரும் சமம். சாமானிய பக்தர்களைப் புறக்கணித்து விட்டு விஐபிகளுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் அளிப்பது ஏற்புடையதல்ல.

விஐபி வருகையால் கோயிலில் வழக்கமான பூஜைகள் மற்றும் நடை சாத்தப்படும் நேரங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படக் கூடாது. விஐபிகளுக்கு என்று தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கினால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இருக்காது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் மே 15 ஆம் தேதி தரிசனம் செய்தார். வழக்கமாக கோயில் நடை மதியம் 12.45 மணிக்கு சாத்தப்படும். ஆனால், அமைச்சருக்காக கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் நிர்மல்குமாரின் தரிசனத்திற்கு பிறகே கோயில் நடை சாத்தப்பட்டது.

அதேபோல் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை எதிர்த்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த பொழுது, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது அறநிலையத்துறை செயலாளரின் அறிக்கையை தாக்கல் செய்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் , கோயில் நடை அடைக்கும் முன்பே அமைச்சர் கோயிலுக்குள் நுழைந்து விட்டார் என்றும், அவரால் மற்ற பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. இதற்கு கண்காணிப்பு கேமரா ஆதாரம் உள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் யாரையும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை என்றும், எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

அமைச்சர் ஒருவருக்காக கோயில் நடை சாத்தப்படும் நேரம் மாற்றப்பட்டு, தாமதமாக திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லக்ஷ்மி நாராயணன் அடங்கிய அமர்வு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com