தமிழ் நாட்டில் திரையரங்குகளில் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூல் செய்யப் படுவதாக புகார் எழுவது வழக்கம். அதன் பிறகு அதன் சூடு ஆறியதும் அந்த விவகாரம் அடங்கி விடுவதும் வழக்கம் தானே.
அண்மையில் கூட உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளி வரும் போது தியேட்டர்காரர்கள் டிக்கெட் விலையை தாறுமாறாக ஏற்றி விற்பனை செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. முன்னணி நடிகர்கள் படம் திரைக்கு வந்தாலே தியேட்டர்காரர்களுக்கு ஏக குஷி தான். தங்களுக்கு விருப்பப்பட்ட விலையினை ஏற்றி டிக்கெட்களை விற்பனை செய்து கொள்ளலாமே. அதையும் வாங்கி செல்ல உச்ச நடிகர்களின் ரசிகக் கூட்டங்கள் உண்டு என்பது யதார்த்த கள நிலவரங்கள்.
திரையரங்குகளில் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூடுதல் கட்டணம் குறித்து 2017ம் ஆண்டு தேவராஜன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப் பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டதுடன், அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது