சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மலைக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘மலைக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைக்கோட்டை கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சந்திவீரன் சாமி கோயில் உள்ளது. வருடந்தோறும் இந்தக் கோயிலில் ஆனி மாதம் எட்டு நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். ஏற்கெனவே கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை தரக்கூடாது என 2020ல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதை எதிர்த்தும், கோயில் விழாவில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை அளிக்கவும் கோரி சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியானது. அதே நபர்களால் இந்த ஆண்டு இந்தத் திருவிழாவில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த ஆனி மாத திருவிழாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோர் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, சந்திவீரன் சாமி கோயில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கும் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை வழங்கவும் கூடாது எனவும், பட்டியலினத்தவர், பழங்குடியினர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவும், திருவிழாவில் பங்கேற்கவும் உத்தரவிட வேண்டும்’ என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு தலைமை நீதிபதி அமர்வு, ‘கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக் கூடாது. அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கோயில் திருவிழாவில் வழிபடுவதை இந்து சமய அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். மேலும், இதனை கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும்’ என அந்த உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.