மெரினா கடற்கரையா அல்லது ஷாப்பிங் மாலா? உயர்நீதிமன்றம் கேள்வி..!

ஷாப்பிங்
ஷாப்பிங்
Published on

ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரையான சென்னை மெரினா கடற்கரைக்கு நாள்தோறும் பல லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். அதன் பரந்த அழகிய மணற்பரப்பில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், அலையோடு விளையாடுவதும் மக்களுக்குப் பிடித்தமான ஒன்றாகும்.இந்த அழகிய சூழலை மேலும் மெருகூட்டும் வகையில் கடற்கரை மணற்பரப்பில் வரிசையாக அமைந்துள்ள கடைகள் ஒரு குட்டித் திருவிழாவையே கண்முன் நிறுத்தும்.

மெரினா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சுடச் சுட பொரித்த மீன் கடைகள்தான்.இது தவிர, மிளகாய் பஜ்ஜி, மொறுமொறுப்பான சுண்டல், சோளம் மற்றும் இனிப்புப் பஞ்சு மிட்டாய்கள் மக்களின் விருப்பமான உணவுகளாக உள்ளன.குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ணமயமான பொம்மைக் கடைகள், பலூன்கள் மற்றும் மணலில் விளையாடும் உபகரணங்கள் விற்கும் கடைகள் ஏராளம். மேலும், குறிபார்த்துச் சுடும் துப்பாக்கி விளையாட்டு (Shooting gallery) மற்றும் ராட்டினங்கள் இளைஞர்களையும் குழந்தைகளையும் ஒருசேர ஈர்க்கும்.

கடல் சிப்பிகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், மாலைகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் விற்கும் கடைகள் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம்.

இந்நிலையில்,சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையுடன் கடைகள் அமைப்பது தொடர்பான வரைவு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வரைபடத்தில் கடைகளுக்கான சரியான இடங்கள் குறித்து தகவல் தெளிவாக இல்லை என குறிப்பிட்டனர். எனவே, மெரினா கடற்கரை பகுதியில் கடைகள் அமைப்பது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, டிசம்பர் 22 ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையில் ஒரு பகுதி நீலக்கொடி சான்று பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு இடங்களை அந்தத் தரத்திற்கு உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, தலைவர்களின் நினைவிடங்களுக்குப் பின்புறம் உள்ள பகுதிகளையும் நீலக்கொடி சான்று பெற்ற இடங்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவிற்கு கடைகள் மறைப்பதாகக் கவலை தெரிவித்த நீதிபதிகள், தற்போது திட்டமிடப்பட்டுள்ள 1,417 கடைகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டும் என மாநகராட்சிக்கு அறிவுறுத்தினர். உலகில் வேறு எந்தக் கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், கடற்கரை என்பது மக்கள் ரசிப்பதற்கான இடமே தவிர, அதனை ஒரு 'ஷாப்பிங் மால்' போல மாற்ற முடியாது என்று குறிப்பிட்டனர்.

உணவுப் பொருட்கள், பொம்மைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் (Fancy items) விற்கும் கடைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், தேவையற்ற இதர கடைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய திட்டத்தைத் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்குக் கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com