தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மிக முக்கிய சிறப்பம்சங்கள்!

தமிழ்நாடு அரசின்  பட்ஜெட்டில் மிக முக்கிய சிறப்பம்சங்கள்!

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள மிக முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

தொழிற்சாலைகளிலும், கட்டுமானம் உள்ளிட்ட அமைப்புச் சாரா தொழில்களிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதை தடுக்க முதற்கட்டமாக 711 தொழிற்சாலைகளில் உள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

2023-2024ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் மருத்துவத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

நாட்டை காக்க உயிர் தியாகம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை 20 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்ச ரூபாயாக அதிகரிப்பு.

சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை திருச்சிராப்பள்ளி, சேலம் மாநகராட்சியின் முக்கிய பொது இடங்களில் இலவச wifi சேவைகள் வழங்கப்படும்.

தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும். இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்படும். புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், சீர்மரபினர், அறநிலையத் துறை உள்பட அனைத்து துறைகள் நடத்தும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் கொண்டுவரப்படும்.

நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக பள்ளி கல்வி துறைக்கு 40,290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சோழப் பேரரசு புகழை உலகறிய செய்ய தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

மதுரை மாநகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 521 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை முதல் அண்ணாசாலை வரை நான்கு வழி சாலை மேம்பாலம் கட்டப்படும். இதன் மூலம் சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.

சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் நீர்வழிகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சென்னையின் முக்கிய ஆறுகளாகத் திகழும் அடையார் மற்றும் கூவம் ஆறுகளை மேம்படுத்த ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவையில் ரூ.172 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.

சேலத்தில் ரூ.880 கோடி மதிப்பீட்டில் 119 ஏக்கரில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும். ஜவுளி பூங்கா அமைக்கப்படுவது மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

குடிமை பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீட்டு தேர்வு மூலம் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வுக்கு  தயாராவதற்காக மாதத்திற்கு 7,500 ரூபாய் வீதம் 10 மாதத்திற்கு ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com