இமாச்சல், உத்தரகண்ட் மழை- நிலச்சரிவுக்கு 66 பேர் பலி!

இமாச்சல், உத்தரகண்ட் மழை- நிலச்சரிவுக்கு 66 பேர் பலி!

மாச்சலம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பெய்த இடைவிடாத கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு 66 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இதனிடையே நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இமாச்சலில் கடந்த 13ம் தேதியிலிருந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். இதனிடையே, இமாச்சலில் அடுத்த இரண்டு நாட்களுக்கும், உத்தரகண்டில் அடுத்த நான்கு நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவில் சிக்கிய மூவரது சடலங்களை மீட்புப் பணியினர் மீட்டுள்ளனர். சிம்லாவில் சிவன் கோயில் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கிய ஒருவரையும், வேறு இடங்களில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டுப் பணியினர் மீட்டுள்ளனர். சிம்லாவின் கிருஷ்ணாநகர் பகுதியில் எட்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 19 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் சிவன் கோயிலில் 12 பேரும், ஃபாகிலி என்ற இடத்தில் 5 பேரும், கிருஷ்ணா நகரில் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர். சிவன் கோயில் இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் போலீஸ் படையினரும் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 20ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளதாகக் கூறினார். மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மின்சாரம், குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காங்க்ராவில் போங் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் (X) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பக்கத்து மாநிலமான உத்தரகண்டில் பெய்துவரும் இடைவிடாத மழைக்கு 6 பேர் பலியாகியுள்ளனர். உத்தரகாசி மாவட்டத்தில் பவார் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களுக்குள் புகுந்ததில் இரண்டு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் தேஜஸ்வினி என்பவரது சடலம் ரிஷிகேஷில் லெட்சுமண் ஜூலா அருகே மீட்கப்பட்டது. தேஜஸ்வினி அவரது தாய் மற்றும் சகோதரருடன் காரில் வந்துகொண்டிருந்தபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இவர்கள் அனைவரும் ரிஷிகேஷில் உள்ள ராணி மந்திர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சாமோலி மாவட்டம், ஜோஷி மடத்தின் கட்டடம் இடிந்து விழுந்ததில் அதன் இடிபாடுகளில் சிக்கியவர்களில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிலச்சரிவு காரணமாக ஜோஷி மடத்தில் பல வீடுகள் மண்ணில் புதைந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com