ZOHO-வின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவருடைய மனைவி பிரமிளா சீனிவாசன் விவாகரத்து வழக்கின் விசாரணையில் முக்கியமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் 25 வருடம் பணியாற்றிவிட்டு சென்னையில் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் கலாச்சார வெற்றிக்கு வித்திட்டவர்.
ஸ்ரீதர் வேம்பு பெரு நிறுவனங்கள், மெட்ரோ நகரங்களை விடுத்து கிராமங்களில் அலுவலகத்தை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என கூறியது மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்றார். இதற்கு முன்னுதாரணமாக ஸ்ரீதர் வேம்பு தற்போது சென்னை தலைமை அலுவலகத்தை விடுத்து தான் இளம் காலத்தில் வளர்ந்த மத்தளம்பாறை பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா சீனிவாசன் இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 30 வருடம் ஆன நிலையில், ஸ்ரீதர் வேம்பு 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியா சென்றதாகவும், அதன் பின்பு அமெரிக்காவுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 2020ல் பிரமிளா சீனிவாசன் வாட்ஸ்அப் செயலியில் தொடர்பு கொண்டு விவாகரத்து கேட்டுள்ளார்.
இதற்காக ஆகஸ்ட் 2021ல் விவாகரத்து பெற அமெரிக்காவில் கலிப்போர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரமிளா சீனிவாசன் தன் பெயரில் இருந்து ZOHO பங்குகளை ஸ்ரீதர் வேம்பு வேண்டுமென்றே பறித்து தனது சகோதரி மற்றும் அவருடைய கணவர் பெயரில் மாற்றியுள்ளார். அதை தன்னிடமும் எதுவும் சொல்லாமல் செய்துள்ளார் என்பதையும் பிரமிளா சீனிவாசன் கூறியதாக போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.
மேலும் பிரமிளா சீனிவாசன், என்னுடைய கணவர் 29 வருடத்திற்கு பின்பு என்னையும் எங்களுடைய மகனையும் 2020ல் விட்டு சென்றார் என ஜனவரி மாத வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இதோடு என்னையோ, என் குடும்பத்திடமோ எவ்விதமான அனுமதியுமின்றி எங்கள் பெயரில் இருந்த கம்யூனிட்டி சொத்துக்களையும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றியுள்ளார் என பிரமிளா சீனிவாசன் தெரிவித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் போர்ப்ஸ்-க்கு ஈமெயில் மூலம் பதில் அளித்துள்ள ZOHO நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஸ்ரீதர் வேம்பு, தான் எந்த பங்குகளையும், யாருடைய பெயருக்கும் மாற்றவில்லை, இதனால் இந்த கேள்விக்கே இடமில்லை. இந்தியாவுக்கு வந்தது என்னுடைய கனவு திட்டமான தொழில்நுட்பத்தின் வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் மீட்கும் முயற்சியை செய்யத்தான் என தெரிவித்துள்ளார்.