

"வெறும் போர் மட்டும் காரணமில்லை...": நெப்போலியனின் பிரமாண்ட இராணுவத்தை வீழ்த்தியது யார்? 200 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!
வரலாற்றின் மிகவும் பிரபலமான ஒரு இராணுவப் பேரழிவின் மர்ம முடிச்சு இப்போது அவிழ்ந்துள்ளது.
1812-ஆம் ஆண்டு, பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் ரஷ்யாவிலிருந்து பின்வாங்கியபோது, கடும் பனியும் போரும் மட்டும்தான் பேரழிவுக்கான காரணம் என்று உலகம் நம்பியது.
ஆனால், அந்த 5 லட்சம் படைவீரர்களின் உயிரைக் குடித்ததற்குப் பின்னால், கண்ணுக்குத் தெரியாத வேறு சில எதிரிகளும் இருந்துள்ளனர்.
மர்மத்தை உடைத்த நவீன அறிவியல்:
ஆயிரக்கணக்கான வீரர்களின் மரணத்திற்குக் காரணமான அந்த உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை, நவீன டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் ஒரு புதிய பிரெஞ்சு ஆய்வுக் குழு இப்போது கண்டுபிடித்துள்ளது.
இந்த ஆய்வு, நெப்போலியன் கால வரலாற்றுப் பதிவுகளையே மாற்றியமைக்கும் திறன் கொண்டது!
மர்ம மரணம்: 5 லட்சம் படையின் சோக முடிவு
1812-ஆம் ஆண்டில், நெப்போலியன் போனாபார்ட்டின் "கிராண்ட் ஆர்மே" (Grande Armee - பிரமாண்ட இராணுவம்) என்று அழைக்கப்பட்ட 5,00000 படைவீரர்களைக் கொண்ட இராணுவம், ரஷ்யாவுக்குள் அணிவகுத்துச் சென்றது.
ஆனால், கடுமையான ரஷ்யக் குளிர், உணவுப் பற்றாக்குறை மற்றும் நோயின் மும்முனைத் தாக்குதலுக்கு அந்தப் படை உள்ளானது.
பின்வாங்கலின் முடிவில், வெறும் 30,000 வீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர் — இது மொத்தப் படையில் 6% மட்டுமே! 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர்க்களத்தை விட, நோய் மற்றும் பனியால் தான் இறந்தனர்.
புதிய காய்ச்சல் தொற்றுக்கள் கண்டுபிடிப்பு
இதுவரை, படைகளை அழித்த முக்கிய நோய்களாக டைஃபஸ் (Typhus) மற்றும் அகழி காய்ச்சல் (Trench Fever) ஆகியவையே அறியப்பட்டிருந்தன.
ஆனால், லித்துவேனியாவின் தலைநகரான வில்னியஸில் (Vilnius) கண்டெடுக்கப்பட்ட நெப்போலியன் வீரர்களின் சடலங்களை நவீன தொல்-மரபணுவியல் (Paleogenomics) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது, பிரெஞ்சு ஆய்வுக் குழு இரண்டு புதிய பாக்டீரியாக்களைக் கண்டறிந்துள்ளது:
பாராடைஃபாய்டு காய்ச்சலை (Paratyphoid fever) ஏற்படுத்தும் பாக்டீரியா.
மீண்டும் வரும் காய்ச்சலை (Relapsing fever) ஏற்படுத்தும் பாக்டீரியா.
ஆய்வாளர்கள் சொன்னது என்ன? இந்த நான்கு நோய்களும் (முன்பு கண்டறியப்பட்ட இரண்டு உட்பட) கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அறிகுறிகளைக் (காய்ச்சல், தசை வலி, சோர்வு) கொண்டிருக்கும்.
1812-ஆம் ஆண்டில் இருந்த மருத்துவர்களால் இவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறியவே முடியாது.
இந்த நோய்கள் பட்டினி, குளிர் மற்றும் சோர்வுடன் சேர்ந்தபோது, வீரர்களின் உயிர் தப்புவது சாத்தியமற்றதாக மாறியது.
வரலாற்றின் மர்மங்களை அவிழ்க்கும் டி.என்.ஏ
வரலாற்றாசிரியர்கள், இந்த மரபணுப் பகுப்பாய்வு மூலம் கடந்த காலத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்துத் துல்லியமான புரிதலைப் பெற முடியும் என்று நம்புகிறார்கள்.
நெப்போலியனின் படையெடுப்பு போன்ற பெரிய இராணுவ நகர்வுகள், நோய்களை மிக வேகமாக ஐரோப்பா முழுவதும் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது.
போர் மற்றும் நோய் பெரும்பாலும் இணைந்தே வருகின்றன என்றும், உள் கட்டமைப்பு சிதைவு, உணவு மற்றும் சுகாதார வசதி (Sanitation) குறைவது ஆகியவையே பெரிய தொற்றுநோய்கள் உருவாக முக்கியக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதாவது, நெப்போலியன் படையின் மரணத்திற்குக் காரணம் வெறும் பீரங்கி குண்டுகளோ, குளிரோ மட்டுமல்ல.
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளே மிக முக்கியமான கொலையாளிகளாக இருந்துள்ளன என்பதை இந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்பு நிரூபித்துள்ளது.