

"உலகில் சர்வாதிகாரம் என்றால் ஹிட்லர், ஹிட்லர் என்றால் சர்வாதிகாரம்" என்று உலகம் அழியும் வரை இந்த பெயர் நீடிக்கும் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சர்வாதிகார மனப்போக்கு கொண்டவர்களை இன்றும் நாம் 'ஹிட்லர்' என்றே அழைப்பது வழக்கம். இப்படிச் சர்வாதிகாரத்தின் மொத்த உருவமாகத் திகழ்ந்த ஹிட்லர் பிறந்த வீடு (ஆஸ்திரியாவில் உள்ளது), சுமார் ரூபாய் 216 கோடி செலவில் காவல் நிலையமாக மாற்றப்பட உள்ளது என்பது தற்போது உலகளவில் பேசப்படும் முக்கியச் செய்தியாகும்.
ஜெர்மனி எல்லை அருகே அமைந்துள்ள ஆஸ்திரியாவின் 'பிரவுனாவ் அன் இன்' (Braunau am Inn) என்ற சிறிய நகரத்தில்தான் 1889-ஆம் ஆண்டு ஹிட்லர் பிறந்தார். பின்னர் தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு நாஜி கட்சியின் தலைவராகி, 1938-ஆம் ஆண்டு ஒரு சர்வாதிகாரியாக உருவெடுத்தார். தான் பிறந்த ஊரை மறக்காத அவர், அங்கு வாழ்ந்த சுமார் 65 ஆயிரம் ஆஸ்திரியர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததுடன், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்களை நாடுகடத்தி, அந்தப் பகுதியை ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். இந்தச் செயல் உலகத்தையே அதிர வைத்ததுடன் அவரது சுயரூபத்தையும் வெளிப்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாக உருவான இரண்டாம் உலகப் போரின் இறுதியில், நேச நாடுகளின் கூட்டுப் படையால் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டார். தற்போது இரண்டாம் உலகப் போரின் 80-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், ஹிட்லர் மற்றும் அவரது நாஜிப் படைகளின் கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட நாடுகள், தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஒரு நாட்டில் ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஹிட்லரின் நாஜிப் படைகள் பயன்படுத்திய கட்டடங்களோ அல்லது பிற பொருட்களோ, அவர்கள் மீதான ஆதரவுச் சின்னங்களாக (Neo-Nazi shrines) மாறிவிடக்கூடாது என்பதில் உலக நாடுகளின் அரசாங்கங்கள் கவனமாக உள்ளன. அந்த வகையில், பிரவுனாவ் அன் இன் நகர மையத்தில், கடைகள் நிறைந்த குறுகிய தெருவில் அமைந்துள்ள ஹிட்லர் பிறந்த வீட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விவாதம் தொடர்ந்து நீடித்து வந்தது. ஒரு கட்டத்தில் இக்கட்டடத்தைப் பள்ளி, நூலகம் அல்லது தற்காலிக அருங்காட்சியகமாகப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், 2016-ஆம் ஆண்டு இந்த பழுதடைந்த கட்டடத்தை ஆஸ்திரிய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதனை ஒரு காவல் நிலையமாக மாற்றப்போவதாக இறுதி முடிவையும் அறிவித்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்றும் பணிகளை ஆஸ்திரிய அரசாங்கம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சுமார் 24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூபாய் 216 கோடி) செலவில், இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ஆஸ்திரிய மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. "ஈவிரக்கமின்றி மக்களைக் கொன்று குவித்த ஒரு சர்வாதிகாரி பிறந்த வீட்டை, புனிதமான பணியைச் செய்யும் காவல் நிலையமாக மாற்றுவது அவசியமா?" என்று ஒரு சாராரும், "மக்களைத் துயரத்தில் ஆழ்த்திய ஹிட்லருக்குத் தண்டனையாக, அவர் பிறந்த இடத்தையே காவல் நிலையமாக மாற்றுவதுதான் சரியான தீர்வு" என்று மற்றொரு சாராரும் வாதிட்டு வருகின்றனர்.
உலகில் நடைபெறும் பெரும் செயல்கள் நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும், அதனை வருங்காலச் சந்ததியினர் அறிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்துவது அவசியம். அந்த வகையில், ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாறுவதையும் வரலாறு நிச்சயம் பதிவு செய்யும்.