
"உனக்கென்ன, உன் அப்பன் சொத்த வச்சு பணக்காரன் ஆகிட்ட" என நிறைய பேரை கிண்டல் செய்வதை பார்த்திருப்போம். சில சமயங்களில் அது உண்மையாகவும் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டது என்னுடைய வாழ்க்கை என தன் சிறுவயது கஷ்டங்களைப் பகிர்ந்துள்ளார் எலான் மஸ்க்.
தனது பரம்பரை சொத்தை வைத்து முன்னுக்கு வராமல் வெறும் 30 ஆண்டுகளில் உலகையே ஆளும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கி சாதித்துக் காட்டியவர் எலான் மஸ்க். தற்போது அவருடைய நிகர சொத்து மதிப்பு 170 பில்லியன் டாலர்களாகும். என்னதான் பலர் தானாக உழைத்து கோடீஸ்வரர்களாக மாறியிருந்தாலும், எலான் மஸ்க் அளவுக்கு புகழையும் உச்சத்தையும் அடைந்ததில்லை.
வேற்று கிரகத்திற்கு மக்களை அனுப்பத் திட்டமிடுவது முதல், ஸ்டார்லிங்க் தொழில்நுட்பம் மூலமாக மனிதனையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கும் திட்டம் வரை, உலகின் எந்த நிறுவனமும் சிந்திக்காத, எதிர்காலத்திற்கு பயனளிக்கும் பல திட்டங்களையெல்லாம் முன்கூட்டியே தொடங்கிவிட்டார் எலான் மஸ்க். இவர் போட்ட சில டிவிட்டர் பதிவுகளை twitter நிறுவனம் நீக்கியதால், கோபம் கொண்டு சில மாதங்களில் பல லட்சம் கோடி கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தையே சொந்தமாக வாங்கிவிட்டார். இந்த அளவுக்கு சிறப்பான விஷயங்களை செய்துவரும் இவருடைய கடந்த காலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்கவில்லை.
இணையத்தில் பலரும் இவரை பரம்பரை சொத்தை வைத்துதான் கோடீஸ்வரராக மாறிவிட்டார் என கிண்டல் செய்து வந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு வயது துயரங்களைப் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.
"தொடக்கத்தில் அடித்தட்டு நிலையிலிருந்து, அப்பர் மிடில் கிளாஸ் நிலைக்கு முதலில் மாறினேன். சிறுவயதில் நான் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. எனக்கு பரம்பரை சொத்து என்று எதுவுமே கிடையாது. யாரும் எனக்கு கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கவில்லை. ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்கிய என் தந்தை அதை வெற்றிகரமாக 30 ஆண்டுகள் நடத்தி வந்தார்.
பின்னர் அதில் நஷ்டம் ஏற்பட்டு நிறுவனமே திவாலானது. அந்த நேரத்தில் எனது சகோதரனும் நானும் குடும்பத்தை நடத்த பணம் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். என்னதான் என்னுடைய தந்தை எனக்கு சொத்தைக் கொடுக்காவிட்டாலும், அதைவிட மதிப்பு மிக்க பொறியியல், இயற்பியல் கட்டுமானம் ஆகியவற்றின் அடிப்படை அறிவை கற்றுக்கொடுத்தார். என்னுடைய பள்ளி பருவத்திற்குப் பிறகு நான் யாருடைய பணத்தையும் எதிர்பார்க்கவில்லை.
சிலர் எனது தந்தைக்கு சொந்தமாக எமரால்டு சுரங்கம் இருந்தது என சொல்கிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் எங்களிடமில்லை. சில காலம் எங்கள் தந்தையே அவ்வாறு எங்களிடம் சொல்லியபோது, நானும் அதை நம்பினேன். ஆனால் நாங்கள் யாரும் அப்படிப்பட்ட சுரங்கத்தை பார்த்ததில்லை. ஒருவேளை அவருக்கு சுரங்கம் இருந்திருந்தால் எனது சகோதரரிடமிருந்து பண உதவி கேட்டிருக்க மாட்டார்" என உருக்கமாகக் கூறியிருந்தார்.
இந்தப் பதிவு, அவரை கிண்டல் செய்தவர்களை வாயடைக்கச் செய்துள்ளது.