ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், மறுபடியும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறது. இரண்டாவது குடிநீர் திட்டத்தை தொடங்கும் பணிகளில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
தருமபுரி மாவட்டத்தில் 15 அணைக்கட்டுகளை புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். 'தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ப்ளோரைடு பாதிப்பு இல்லாத குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக முதல் குடிநீர்த்திட்டம் தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாவது குடிநீர் திட்டத்தையும் தி.மு.க அரசு செய்து முடிக்கும்' என்றார்.
இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றிய அறிவிப்பு வந்தபோது கர்நாடகா அரசு கண்டனங்களை தெரிவித்தது. 'திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்தியாவின் நீர்வளக் கொள்கைகளின் படி குடிநீர்த் தேவைக்குத் தான் முன்னுரிமை தரப்படவேண்டும். ஆகவே, குடிநீர் திட்டத்தைத் தொடங்கும் உரிமை நிச்சயம் தமிழகத்திற்கு உண்டு' என்று அப்போது அமைச்சர் துரைமுருகனும் அறிக்கை மூலமாக விளக்கம் தந்திருந்தார்.
2008ல் முதலாவது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.1,928 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் படி காவிரி நீர், நீரேற்று நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு, ஒகேனக்கலை சுற்றியுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டமும் தற்போது பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தருமபுரியில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை, தருமபுரி மாவட்டம் முழுவதும் வறட்சியில் பிடியில் இருப்பதற்கு 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியே காரணம் என்றார்.
'டெல்லியின் ஆர். கே புரத்தில் மட்டும் தருமபுரியைச் சேர்ந்த 25 ஆயிரம் பேரை பார்கக முடியும். ஏராளமானவர்கள் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். தருமபுரியில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்கான எந்தவொரு முனைப்பை இல்லை என்றவர், இறுதியாக ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
‘ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சரியான முறையில் திட்டமிடாத காரணத்தால் தரமான குடிநீரை வழங்கமுடியவில்லை. ப்ளூரோசிஸ், ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மில்லி லிட்டருக்கும் அதிகமாக இருப்பதால் கிடைப்பது தரமான குடிநீராக இருக்க வாய்ப்பில்லை. அதுவொரு தோல்வியடைந்த திட்டம் என்று சி.ஏ.ஜி அறிக்கையே சொல்லிவிட்டது’ என்றார். அரசு, என்ன சொல்லப் போகிறது?