

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'மோன்தா' புயலாக வலுவடைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது இந்த புயல் சென்னையிலிருந்து 600 கி.மீ தொலைவில் மையம் கொண்டு, மணிக்கு 16 கி.மீ வேகத்தில் ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது
மோன்தா புயல் காக்கிநாடா – மசூலிப்பட்டினம் இடையே நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது 90 முதல் 110 கி.மீ வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இது சென்னையில் இருந்து தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.