புனித வெள்ளி!

புனித வெள்ளி!
Published on

கிழமைகளுக்குள் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. அதிலும்,தை வெள்ளி, ஆடி வெள்ளி , புனித வெள்ளி மூன்றும் மிகச் சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.

இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட அந்த நாள் உலகம் முழுவதும் 'புனித வெள்ளி' யாக  கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

தனது துன்பங்களை பொருட்படுத்தாமல் பிறர் துன்பங்களையும்  தானே சுமந்து எல்லோரையும்  நல்வழிப்படுத்த நினைத்தார். அவர்  சுமந்த சிலுவை  அவரை வானளாவிய உயரத்துக்கு  கொண்டு சென்றது. தாங்கள் செய்யும் தவறுகள் இன்னதென்று    தெரியாதவர்களையும்  மன்னித்து  அவர்களையும் நல்வழிப்படுத்த மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தார் இயேசு பிரான்.

இரட்சணிய யாத்திரிகத்தில் "ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழை என ஒர்மின்" என்று பாடியுள்ளார் அந்த நூல் ஆசிரியர்  எச்.ஏ.கிருட்டிணனார்.   பகைவர்கள் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றது , அன்புச் செயலால் அல்ல. தம் மீது பகை கொண்டு தமக்கு இழிவான செயல்களைச் செய்த இவர்கள் காலம் முழுவதும் துன்பத்தில் இருப்பார்களே என்று  எண்ணி, அவர்களுக்காக இரக்கப்பட்டு அமைதி காத்தார்.

 அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல்தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையை போல அமைதி காத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

 "என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார் "    பகைவர்களின் கொடுஞ்செயல் கண்டு மக்கள் இத்தனை கொடுமைகளுக்கு பிறகும் இந்த உலகம் வெடிக்காமல் இருக்கிறதே என்று  புலம்பினார்கள்.  இயேசு பிரான் இவ்வுலகை அன்பால்  ஆட்கொள்ள வந்தாரே   தவிர அழிக்க அல்ல. தமது  அமைதியால்  பகைவர்கள் மீதும்   கொண்ட கருணையால் உலக மக்களுக்கு இதை உணர்த்தினார்.

கிறிஸ்தவ மாதத்தில் தவக்காலம்   என்ற ஒன்று உண்டு. ஈஸ்டருக்கு முன் வரும் 40 நாட்கள்  தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது.  

இந்த காலத்தில்   உண்ணாவிரதம், பிரார்த்தனைகளில் தீவிர கவனம்  செலுத்துவார்கள். இந்த தவக் காலத்தில் முக்கிய நிகழ்வுகளில்  ஒன்று குருத்தோலை ஞாயிறு ஆகும். நமக்கான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் போது சிறிதளவாவது பிறருக்காக வாழவேண்டும். புனித வெள்ளி கற்றுத் தரும் பாடம் அது தான்.  துன்பங்கள் வந்தால் அதை சிலுவையாக  ஏற்று தேவன் வீட்டு கதவை தட்டுங்கள், அது திறக்கப் படும். கருணை வெள்ளம் போல் வந்து நம்மை மூழ்கடித்து இரட்சிக்கும்.     

     "மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான் 

       நல்ல மனிதர் நடுவில் புனிதர் வடிவம் பெறுகிறான் 

       எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே 

       ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறான்..."

கவியரசர் வரிகளில் மெல்லிசை மன்னரின் இசையில்  வாணி ஜெயராம் அவர்கள் பாடியதை கேளுங்கள்...   கேளுங்கள்...கேட்டுக்கொண்டே இருங்கள். இறைவன்  உங்கள் அருகிலே இருப்பதை புரிந்து கொள்வீர்கள்.   உங்கள் வாழ்க்கை புனித  பயணமாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com