வீடு தேடி வரும் குடிநீர் திட்டம் - ஐந்து மாநிலங்களில் பின்னடைவு!

வீடு தேடி வரும் குடிநீர் திட்டம் - ஐந்து மாநிலங்களில் பின்னடைவு!

மத்திய அரசின் திட்டமான வீடு தேடி வரும் குடிநீர் திட்டம் வரும் 2024 ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் என்றும் இலக்கு நிறைவேற வாய்ப்பில்லை என்கிறார்கள். சத்தீஸ்கர், ஜர்க்கண்ட். கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பணிகள் நிறைவடையாத நிலை தொடர்கிறது. 50 சதவீத பணிகள் கூட நிறைவடையவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜல் ஜீவன் இயக்கம், 3.6 லட்சம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்கீடு 50 சதவீதமும், எஞ்சியவற்றை மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளும். நடப்பாண்டில் 54 ஆயிரம் கோடி ரூபாயை ஜல் சக்தி அமைச்சகம் ஒதுக்கியிருக்கிறது. சென்ற ஆண்டு 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒவ்வொரு கிராமங்களிலும் திட்டம் நிறைவேற இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய்களின் மூலமாக குடிநீர் வழங்கப்படுவதுதான் திட்டத்தின் நோக்கம்.

வீடு தோறும் குழாய்கள் வழியாக குடிநீர் என்பது, ஒவ்வொரு வீடும் குறைந்தபட்சம் 55 லிட்டர் தண்ணீரை ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், கோவா, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் 80 சதவீத கிராமங்களுக்கு ஜல் ஜீவன் பணிகள் முடிவடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

சத்தீஸ்கர், ஜர்க்கண்ட். கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பணிகள் பெருமளவு தாமதமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ஐந்து மாநிலங்களிலும் 50 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. ஐந்து மாநிலங்களில், மேற்கு வங்கத்தில் 33 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துளளது. மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே திட்டதை நிறைவேற்றமுடியும்.

நிதிச்சுமை, அதிகமான பொருட்செலவு, கொரானா தொற்று உள்ளிட்ட விஷயங்களால் திட்டப்பணிகள் தொடர்ந்து தாமதாமாகி வருகின்றன. ஒவ்வொரு மாநிலமும் கடுமையான முயற்சிகள் எடுதது வருகின்றன. ஆனாலும் 5,6 மாநிலங்களில் பாதி பணிகள் கூட நிறைவடையவில்லை. இது சம்பந்தப்பட்ட மாநிலங்களை குறை கூற முடியாது. இதுவொரு பெரிய திட்டம். தேசிய அளவில் 16 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. ஒரு சில மாநிலங்களில் அடிப்படை வசதியிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியிருந்தது.

கெரானா பரவல் காரணமாக ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. உக்ரைன் போர் காரணமாக மெட்டல், பைப் உள்ளிட்டவற்றின் விலைகள் ஏற்றம் கண்டதன் காரணமாக பணிகள் தடைப்பட்டன. விலை உயர்வில் காரணமாக பணிகளை தொடர்வதற்கு ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டினார்கள்.சமீபத்தில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் நிறைய கிராமங்களில் ஜல் ஜீவன் பணிகள் விறுவிறுப்பாக நடந்த வருகின்றன. தேசிய அளவில் 70 ஆயிரம் கோடி, ஜல் ஜீவன் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது- கடந்த ஆண்டின் இறுதியில் திட்டத்தின் 53 சதவீத இலக்கை எட்டிவிட்டோம் என்று அமைச்சகம் அறிவித்தது. ஆனாலும், திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com