மைலேஜ் பார்த்து பைக் வாங்குவோரை மிகவும் கவர்ந்த வாகனங்களில் ஒன்று சிடி 100. ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து வாகனங்களை உற்பத்தி செய்தபோது வெளியான இந்த சிடி 100 வாகனம், நடுத்தர மக்களின் மிகவும் விருப்பமான தேர்வுகளில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த வாகனத்தையே பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, மறு உருவாக்கம் செய்து களமிறக்கியுள்ளது ஹோண்டா நிறுவனம்...
ஹோண்டா சிடி 110 டிரீம் டீலக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கில், சைட் ஸ்டாண்ட் போட்டிருக்கும் நேரத்தில், ஸ்டார்ட் ஆவதை தடுக்கும் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இப்போது இருக்கும் பைக்குகளில் இருக்கும் செல்ஃப் ஸ்டார்ட், டியூப்லெஸ் டயர் என பல்வேறு வசதிகளும் உள்ளன.
விலை குறைவான இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வரும் ஹோண்டா நிறுவனம், சிடி 110 பைக்கின் ஆரம்ப விலையாக 73 ஆயிரத்து 400 ரூபாயை நிர்ணயம் செய்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஹோண்டா சைன் 100 பைக்கை சுமார் 65 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்த ஹோண்டா, தற்போது மற்றொரு விலைக் குறைந்த பைக்கை அறிமுகம் செய்து, போட்டி நிறுவனங்களுக்கு டஃப் கொடுத்துள்ளது.