

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த தேர்தலை விட அதிக அளவில் வாக்கு சதவிகிதத்துடன் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான நிலையில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து வருகிறார். மேலும் தேர்தல் அலுவலர்கள்,காவல்துறையினர் இவர்களுடன் பதட்டமான வாக்குச்சாவடிகள் எனக் கருதப்படும் வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் என ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
எனினும் ஆங்காங்கே சில நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியை தங்கள் பகுதியில் இருந்து ஊருக்குள் மாற்றியதை கண்டித்து காட்பாடி தொகுதி பொன்னை அருகே பாலகுப்பம் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கோட்டகுப்பம் கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு .பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மற்றும் 11ஆவது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர் என்ற தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தற்போதைய செய்தியாக சென்னை ஆழ்வார்பேட்டை தொகுதியில் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் நுழைத்து விட்டதாக கூறி ஒரு தரப்பினர் அவரை வெளியேற்றுமாறு காவல்துறையுடம் புகார் அளித்துள்ளனர்.
மற்றொரு தரப்பினரோ அந்த நபரை வெளியேற்றக் கூடாது என கோஷம் எழுப்ப அங்கு வந்த துணை ராணுவத்தினர் அந்த சந்தேகத்துக்குரிய நபரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த பரபரப்பான சூழலால் அங்கு வாக்களிக்க வரிசையில் நின்று இருந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த மேல்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில்மேல்கோட்டை வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மாரிமுத்து என்பவருக்கும், பாலமுருகன் என்பவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை மாரிமுத்துவை நோக்கிக் குறிவைத்து வீசியுள்ளார்.மாரிமுத்து அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பினார். ஆனால், பாலமுருகன் வீசிய கத்தி தவறுதலாக மாரிமுத்துவின் அருகில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவரின் காலில் பலமாகப் பாய்ந்தது.ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகத் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாக்குச்சாவடியில் அமைதி காக்க வேண்டும் என்பது பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள ஒரு வேண்டுகோள் . அதை பொருட்படுத்தாமல் விதியை மீறும் இது போன்ற நபர்களால் பொதுமக்களுக்கும் பாதிப்பு எழுகிறது என்பதுதான் உண்மை.