
பெற்றோர்கள் தன் குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காததால், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்று பெற்றோரிடம் 50 டாலர்கள் கூடுதலாக வசூலித்த சம்பவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
ஜார்ஜாவில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சில வாரங்களுக்கு முன்பு கைலே மற்றும் அவரது மனைவி தன் குழந்தைகளுடன் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உணவருந்தி முடித்த பிறகு, ரெஸ்டாரண்ட் உரிமையாளர் இவர்களிடம், உங்கள் குழந்தைகள் அதிகம் சத்தம் எழுப்பி அங்கும் இங்குமாக ஓடியாடி விளையாடியதால் கூடுதல் தொகை தரும்படி கேட்டு வசூலித்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட இந்த மோசமான அனுபவம் பற்றி ரெஸ்டாரண்ட்-ன் இணையப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார் கைலே.
கையிலே தம்பதியினர் தங்களின் மூன்று குழந்தைகள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து மொத்தம் பதினோரு குழந்தைகளுடன் ஒன்றாக சேர்ந்து ஜார்ஜியாவில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு சென்றுள்ளனர். அவர்களுக்கான உணவு வரும் வரை குழந்தைகள் அமைதியாக போனை நோண்டிக் கொண்டிருந்ததாகவும், உணவு வந்ததும் சாப்பிட்டுவிட்டு அமைதியாக வெளியே வந்துவிட்டதாகவும் கைலே கூறுகிறார். எந்த குழந்தையும் உணவகத்தில் மோசமாக நடந்து கொள்ளவில்லை என அந்த தம்பதியினர் கூறுகின்றனர்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை அனைவரும் சாப்பிட்டு முடித்து வெளியே செல்லும் சமயத்தில் ரெஸ்டாரண்ட்-ன் உரிமையாளர் திடீரென வந்து, உங்கள் குழந்தைகளை நீங்கள் ஒழுங்காக கவனிக்காததால் உங்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக எங்களிடம் கூறினார். ஆனால் குழந்தைகள் எங்கள் கண் பார்வையிலேயே அமைதியாகதான் இருந்தார்கள் என அந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து அந்த ரெஸ்டாரன்ட் உரிமையாளர் கூறுகையில், " கொரோனா காலத்தில் தான் இப்படி தொந்தரவு செய்பவர்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கும் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்தினோம். ஆனால் இதுவரை நாங்கள் யாரிடமும் இப்படி கூடுதல் தொகையை வசூலிக்கவில்லை. ஆனால் இந்த குழந்தைகள் ரெஸ்டாரண்ட் முழுவதும் அனைவருக்கும் தொந்தரவு கொடுக்கும் விதமாக ஓடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் எச்சரிக்கை தான் கொடுத்தேனே தவிர பணம் ஏதும் வசூலிக்கவில்லை. அவர்கள் வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கவனித்து பெற்றோர்களாக நடந்து கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் உணவக உரிமையாளரின் நடத்தை குறித்து மேலும் பலரும் தங்களின் அனுபவத்தை கருத்துக்களாக பதிவிட்டுள்ளனர். அந்த உரிமையாளரும் பணியாட்களும் குழந்தைகளுடன் உணவகத்திற்கு வருபவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதாக பலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.