
ஒருவருக்கு அதிர்ஷ்டம் எப்போது தேடிவரும் என்று சொல்ல முடியாது. ஏழையாக இருக்கும் ஒருவர் ஒரே இரவில் கோடீஸ்வரனாக மாறக்கூடும். இப்படித்தான் சிலி நாட்டில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. எக்ஸிக்யூல் ஹினோஜோஸா என்பவர் ஒருநாள் வீட்டில் மறைந்த தனது தந்தையின் உடமைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அப்போது 60 ஆண்டுகள் பழமையான வங்கி கணக்குப் புத்தகம் இருப்பதை கண்டுபிடித்தார். அது அவருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டுவந்தது. எப்படித் தெரியுமா? மேலே படியுங்கள்.
1960-70-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஹினோஜோஸாவின் தந்தை வீடு வாங்குவதற்காக வங்கியில் பணம் சேமித்து வந்தார். வங்கி கணக்கு புத்தகத்தில் அவரது கணக்கில் 1,40,000 பிஸோக்கள், அதாவது இன்றைய கணக்கில் 163 டாலர் இருப்பது தெரியவந்தது. வட்டி மற்றும் பணவீக்கத்துடன் கணக்கிட்டால் 1,40,000 பிஸோக்கள் இப்போது 1 பில்லியன் பிஸோக்கள் அல்லது கிட்டதட்ட 1.2 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 8.22 கோடி) என மதிப்பிடப்பட்டது.
அவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். தந்தை ஒரு குறிப்பிட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தது குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தெரியாது. தந்தை இறந்த பிறகு அவரது உடமைகள் ஒரு பெட்டியில் வைத்து பரண் மேல் வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் ஒருநாள் வீட்டை சுத்தம் செய்யும்போது தந்தையின் பெட்டியிலிருந்த வங்கிக் கணக்கு புத்தகம் கண்டெடுக்கப்பட்டது.
ஆனால், துரதிருஷ்டவசமாக அவரது தந்தை வங்கிக் கணக்கு வைத்திருந்த வங்கி மூடப்பட்டுவிட்டது. பொதுவாக வங்கிகள் மூடப்பட்டுவிட்டால் வங்கி கணக்குப் புத்தகம் மதிப்பற்றவைகளாகிவிடும். ஆனால், அந்த வங்கி கணக்குப் புத்தகத்தில், “உங்கள் பணத்துக்கு அரசு உத்தரவாதம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனாலும், தற்போதுள்ள அரசு அந்த உத்தரவாதத்தை மதிக்கவில்லை. இதையடுத்து ஹினோஜோஸா, அரசுடன் சட்ட மோதலுக்கு தயாரானார். ஹினோஜோஸா தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சாதாரண நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை அவருக்கு சாதகமான தீர்ப்பு அளித்த போதிலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.
வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. இது எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான பணம். எங்கள் தந்தை கடுமையாக உழைத்து சம்பாதித்து சேமித்த பணம். சமீபகாலம் வரை இந்த வங்கி கணக்குப் புத்தகம் இருப்பது எங்களுக்குத் தெரியாது என்று ஹினோஜோஸா வாதாடினார். நாங்கள் எங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை மட்டுமே கேட்கிறோம். அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை என்றும் வாதாடினார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹினோஜோஸாவுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. இறுதியில் அரசு அவருக்கு சேர வேண்டிய 1 பில்லியன் பிஸோக்களை (சிலி நாட்டு நாணயம்) கொடுக்குமாறு உத்தரவிட்டது. அதாவது வட்டியையும் சேர்த்து அவருக்கு ரூ.10 கோடி கிடைத்தது.