மாதவிடாய் விடுப்பு பாலிஸி உலக நாடுகளில் எப்படியெல்லாம் இருக்கு? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

மாதவிடாய் விடுப்பு பாலிஸி உலக நாடுகளில் எப்படியெல்லாம் இருக்கு? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Published on

மாதவிடாய் என்பது பெண்களுக்கு வரமா? சாபமா? எனும் தலைப்பில் தொடர்ச்சியாக பல நூறு ஆண்டுகளாக விவாதங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கின்றன. காரணம் அந்நாட்களில் பெண்களின் உடல் அவர்கள் இழுக்கும் இழுப்பிற்கு எல்லாம் ஈடு கொடுப்பதில்லை என்பதாலேயே தான்.

உண்மையில் கடினமான காலகட்டங்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமும் ரிஸ்க் எடுக்க வல்லவர்கள். உடல் வலிமையில் ஆண்கள் தங்களை மேலானவர்களாகக் கருதிக் கொண்டாலும் மன வலிமையில் பெண்களே மேலானவர்கள் என்பதற்கு இந்த மாதவிடாய் காலங்கள் ஒரு உதாரணம்.

பெண்கள் தங்களது மாதாந்திர வலிகளைப் பொருத்துக் கொண்டு எத்தனையோ வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் நலத்துடன் சேர்ந்து மன நலமும் பாதிப்படைகிறது, இது மன அழுத்தம் உள்ளிட்ட நீண்ட காலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடும் எனவே அதற்கென்று அவர்களுக்கு குறுகிய கால தற்காலிக ஓய்வு வழங்கப்பட வேண்டும் எனும் குரல் பல காலங்களாகவே உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதைச் சில நாடுகள் சரியாக விளங்கிக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. அவை எந்தெந்த நாடுகள் என்று இப்போது தெரிந்து கொள்வோமா?

வெகு சமீபத்தில் அதாவது கடந்த வாரத்தில் தான் ஐரோப்பாவின் முதல் மாதவிடாய் ஊதிய விடுப்புச் சட்டத்தை ஸ்பெயின் நிறைவேற்றியிருக்கிறது.

ஐரோப்பாவில் முதன்முறையாக, மாதவிடாய் காலங்களில் அதிக வலியை அனுபவிக்கும் பெண்கள், மூன்று நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் ஒப்புதல் அளித்துள்ளது. மாதவிடாய் வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நடவடிக்கை மிகச்சிறந்த நிவாரணமாக அமையலாம்.

அடுத்த முறை உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது நீங்கள் வலியால் துடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்,அப்போது நீங்கள் ஸ்பெயினில் வசிக்கிறீர்கள் எனில் அதிலும் நீங்கள் ஒரு வொர்கிங் வுமன் எனில் நிச்சயம் கடந்த வியாழன் அன்று இயற்றப்பட்ட சட்டத்திற்கு நீங்கள் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும், ஏனெனில், இனிமேல் உங்கள் மாதவிடாய் வலியைப் பொருத்துக் கொண்டு வேலைக்கு வந்தே ஆக வேண்டுமென்பதில்லை, உங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக் கொள்ளும் உரிமையை அந்தச் சட்டம் வழங்குகிறது.

இதன்மூலமாக, மாதவிடாய்க்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் எனும் பெருமை அந்நாட்டிற்கு கிடைத்துள்ளது.

ஸ்பெயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மசோதாவானது, 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் கருக்கலைப்பு செய்ய அல்லது அவர்களின் அடையாள அட்டையில் தங்கள் பாலினத்தை சுதந்திரமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகள் பற்றிய பரந்த தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

இந்தச் சட்டத்தின் உந்து சக்தியாக இருந்த சமத்துவ அமைச்சர் ஐரீன் மான்டேரோ, இந்தச் சட்டத்தை "பெண்ணிய உரிமைகளுக்கான முன்னேற்ற நாள்" என்று பாராட்டினார்.

1922 ஆம் ஆண்டில் மாதவிடாய் விடுமுறைக் கொள்கை ரஷ்யாவில் அறிமுகமான போது அது குறித்து மிகப்பெரும் விவாதங்கள் எழுந்தன. இந்த விடுமுறையானது வேலைத்தளங்களில் பெண் ஊழியர்களுக்கு பாரபட்சமாக வழங்கப்படுகிறது எனும் குரல் வலுக்கத் தொடங்கியதும் 1927 ஆம் ஆண்டில் அது கைவிடப்பட்டது.

ஜப்பானில் 1947 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த மாதவிடாய் விடுப்புச் சட்டம், வலி மிகுந்த அந்த 3 நாட்களில் வேலை செய்யச் சொல்லி பெண் ஊழியர்களை நிறுவனங்கள் வற்புறுத்தக்கூடாது என்று வலுயுறுத்தியது.

தென் கொரியா மற்றும் ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் தங்கள் மாத விடாய் காலங்களில் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு.

தைவானில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் மூன்று நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு.

இந்தோனேசியாவில் பெண்கள் தங்கள் மாதாந்திர தேவைக்காக இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.

இப்படி உலகம் முழுக்கவே பெண்களின் மாதாந்திர வலிகளைப் புரிந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவது பொது தளத்தில் அந்த வலிகள் குறித்த ஒரு புரிதலை உருவாக்கி வருகிறது என்பது மெய்.

ஆனால், இந்தியாவில் இதுவரையிலும் சட்டப்பூர்வமாக மாதவிடாய் காலங்களில் பெண்களை ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிக்கும் சட்டங்களென எதுவும் இல்லை. சில தனியார் நிறுவனங்கள் தங்களது பெண் ஊழியர்கள் மாதவிடாய் காலங்களில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றன. பீஹார் அரசும் கூட அந்த மாநிலப் பெண்களுக்கு இரண்டு நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்திருக்கிறது.

ஆனால், இதற்கென முறையான சட்ட அங்கீகாரம் வேண்டும் என்பதே ஒட்டு மொத்த இந்தியப் பெண்களின் கருத்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com