ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை பிகாரில் முதல்வராக நீடிக்கும் நிதிஷ்குமார்!

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார்
Published on

பிகார் அரசியல் நிலவரத்தை யாராலும் கணிக்க முடியாது. எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கடந்த சனிக்கிழமை தனது தோழர்களான ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) மற்றும் காங்கிரஸிடம் விடைபெற்று மகா கூட்டணியை விட்டு வெளியேறி கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்தார் நிதிஷ்குமார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள மக்களிடே பிகார் அரசியல் பற்றித்தான் பேச்சு. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. முதல்வராக நிதிஷ்குமாரே நீடிக்கிறார். பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சித்துவேலை செய்து முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்வது நிதிஷ்குமாருக்கு கைவந்த கலையாகும். இதன் ரகசியம் என்ன என்று பார்ப்போம்.

பிகார் அரசியல் நிலவரம் யாராலும் கணிக்க முடியாதது. எப்போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கடந்த சனிக்கிழமை ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த மகாகூட்டணியிலிருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், உடனடியாக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அடுத்த நாளே (ஞாற்றுக்கிழமை) மீண்டும் பழைய நண்பர்களை சந்தித்து புதிய அரசை அமைத்து முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பிகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராகியுள்ளார். நிதிஷ் முதல்வராக பொறுப்பேற்ற அடுத்த நாளே அவருடைய பழைய கூட்டாளிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அரசியல் என்பது காலத்தின் விளையாட்டு. சரியான நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசியல். சரியான நேரத்தில் காயை நகர்த்த வேண்டும். பழைய பகையை மறந்துவிட்டு மீண்டும் புதிய நண்பர்களாவது, எதிரிகளை ஆரத்தழுவுவது, எதிரிகளை கட்டியணைப்பது எல்லாம் அரசியலின் ஒருபகுதியாகும்.

2020 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன். அதாவது பா.ஜ.க. என்னும் நண்பருடன் சேர்ந்து ஆட்சியைப் பிடித்த நிதிஷ்குமார், 2022 இல் பா.ஜ.க. கூட்டணியை விட்டு வெளியேற கொஞ்சம்கூட தயங்கவில்லை. அதேநேரத்தில் பழைய அரசியல் எதிரிகளை நண்பர்கள் ஆக்கிக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்தார்.

இப்போது, மக்களவைக்கு தேர்தல் வரும் நேரத்தில், ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி, நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜ.க.வுடன் நட்புறவை புதுப்பித்துக் கொண்டுள்ளார். சந்தர்ப்பம் கிடைக்கும்போது பாதையை மாற்றுவதுதான் அரசியல் சூதாட்டம். இதுதான் லாலு மற்றும் காங்கிரஸ் மற்றும் இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் ஒருபோதும் நிதிஷ்குமாருடனோ அல்லது அவருடைய கட்சியினுடனோ கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சமீபகாலம் வரை பா.ஜ.க. கூறிவந்தது. ஆனால், இப்போது இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அதற்கான காரணங்களையும் விளக்கவில்லை.

பிகாரில் நிதிஷ்குமார் தயவு இல்லாமல் யாதவர் அல்லாதவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வாக்குகளைப் பெறமுடியாது, ஜெயிப்பது சாத்தியமில்லை என்று நினைத்ததால் என்னவோ பா.ஜ.க. மீண்டும் நிதிஷ்குமாருடன் கை கோர்த்துள்ளது.

இந்த புதிய அரசியல் திருப்புமுனையால், கூட்டணி மாற்றத்தால் பெரும்பலனை அடையப்போவது பா.ஜ.க.தான். இதில் இழப்பு நிதிஷ்குமாருக்குத்தான். அவரது அரசியல் அடித்தளத்தையே சூறையாட பார்க்கிறது பா.ஜ.க. இது தெரியாமல் ஏமாந்து போய் நிற்கிறார் நிதிஷ்குமார். அவருக்கு தேவை முதல்வர் பதவிதான். எதிர்காலத்தில் நடக்கப்போவது குறித்து அவருக்கு எந்த கவலையும் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com