

EPIC என்பதன் முழு வடிவம் 'வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை'. பொதுவாக இது வாக்காளர் அட்டை என்று அழைக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் இந்த வாக்காளர் அடையாள அட்டையில், வாக்காளரின் பெயர், புகைப்படம், பாலினம், பிறந்த தேதி, வயது, முகவரி மற்றும் பிரத்யேகமான EPIC எண் ஆகியவை இருக்கும்.
சட்டப்படி, ஒரு நபரிடம் EPIC எண் ஒன்று மட்டுமே இருக்க முடியும்.பொதுவாக, ஒருவர் வேறு ஊருக்கு மாறும்போது புதிய வாக்காளர் அட்டையைப் பெறுவார். பல நேரங்களில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு/ஊருக்கு மாறிச் செல்பவர்கள், தங்களுடைய பழைய EPIC எண்ணை ரத்து செய்வதில்லை. இந்த சூழ்நிலையில், ஒரு நபரின் பெயரில் இரண்டு EPIC எண்கள் வழங்கப்படுகின்றன.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படி சரிபார்ப்பது?
1.இந்திய தேர்தல் கமிஷனின் https://voters.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
2. பின்னர் அதன் வலதுபுறத்தில் 'Search in Electoral Roll' என்ற பகுதியை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
3. இப்படி ஓபன் செய்யும் போது புதிய டேப் (Tab) ஒன்று ஓபன் ஆகும். அதில், Search by EPIC, Search bu Detail and Search by Mobile என 3 வகைகள் காட்டும். இதில் உங்களுக்கு சவுகரியமான ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவரங்களை கொடுத்தால் உங்களின் பெயர், ஓட்டுச்சாவடி எண், மையம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் காட்டும்.
4. Search by EPIC என்ற ஆப்ஷனை கொடுத்தால் உங்களுக்கு மாநிலத்தின் EPIC எண் (வாக்காளர் அடையாள அட்டை எண் தர வேண்டும்) அளிக்க வேண்டும். அப்போது தான் விவரங்களை பெற முடியும்.
5. Search by Details என்று இருக்கும் ஆப்ஷனை நீங்கள் கொடுத்தால் உங்களின் பெயர்/தகப்பனார்/கணவர் பெயர், பிறந்த தேதி, இருப்பிடம் போன்ற தகவல்களை டைப் செய்ய வேண்டும். இந்த தகவல்களை உள்ளீடு செய்தால் உரிய விவரங்கள் கிடைக்கும்.
மேற்கண்ட நடைமுறைகளில் Search by Mobile என்ற ஆப்ஷன் என்பது எளிதான ஒன்று. இதை செலக்ட் செய்தீர்கள் என்றால் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை கொடுத்தால் ஓடிபி (OTP) வரும். அதை இதில் பதிவிட்டால் உரிய விவரங்களை பெற முடியும்.
இந்த போர்ட்டலின் உதவியுடன், ஒருவர் தனது பெயரில் இரண்டு EPIC எண்கள், அதாவது இரு வாக்காளர் அட்டைகள் உள்ளதா என்பதையும் கண்டறியலாம்.ஒன்றுக்கு மேற்பட்ட EPIC எண்கள் கண்டறியப்பட்டால், அந்த நபர் படிவம் எண் 7ஐ நிரப்பி தனது பழைய வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க, ஒருவர் தேர்தல் ஆணையத்தில் படிவம் எண் 6ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் முறையாக வாக்காளராக தன்னைப் பதிவு செய்பவர்கள், இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தப் படிவத்தில், நபரின் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், முகவரி, குடும்பத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை.
இந்தப் படிவத்தை வாக்காளர் உதவி மைய செயலியில் ஆன்லைனில் நிரப்பலாம் அல்லது BLO அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.