கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரில் வசிக்கும் ரஷீத் என்கிற முகமது ஷாபி என்கிற போலி மந்திரவாதியும் மற்றும் பத்தனம் திட்டாவில் உள்ள எலந்தூரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ தம்பதி பகவல் சிங் மற்றும் லைலாவிடம் கொச்சி போலீஸார் நடத்திய விசாரணையில் இரட்டை கொலைகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
பொன்னுருண்ணியைச் சேர்ந்த லாட்டரி விற்பனையாளரான பத்மா மற்றும் அங்கமாலி அருகே காலடியில் வசிக்கும் ரோஸ்லின் ஆகியோரின் பணத்தேவையை பயன்படுத்தி, இருவரையும் வெவ்வேறு மாதங்களில் கடத்தி வந்து நரபலி கொடுத்துள்ளதாக போலீஸ் நடத்திய ஆரம்பநிலை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
பலியான இரு பெண்களும் காணாமல் போனதாக, கொச்சி நகரின் கடவந்திரா காவல் நிலையத்திலும், எர்ணாகுளம் கிராமத்தைச் சேர்ந்த காலடி காவல் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த இரண்டு பெண்களும் காணாமல் போன இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே கொல்லப்பட்டதாக கொச்சி காவல் துறை ஆணையர் நாகராஜு தெரிவித்தார்.
பண ஆசையில் கேரள தம்பதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா செல்வச்செழிப்போடு, வாழும் நோக்கத்துக்காக இந்த நரபலி நடத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கடவந்திராவிற்கும் திருவல்லாவிற்கும் இடையே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காணாமல் போன பத்மாவுடன் ஷாஃபி ஒரு வாகனத்தில் நுழைந்த மங்கலான காட்சி மூலம் இந்த வழக்கில் துப்பு துலங்கியது.
தருமபுரியைச் சேர்ந்த பத்மாவை நரபலி கொடுத்தப் பிறகு சில பூஜைகள் செய்துள்ளார் முகமது ஷாஃபி. பின்னர் உடலை 56 துண்டுகளாக வெட்டியுள்ளனர். கழுத்தை கத்தியால் அறுத்தவர்கள், கைகளையும், கால்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சிறு சிறு துண்டுகளாக வெட்டியுள்ளனர். மேலும், ``அந்த மாமிசத்தில் சிறிது சாப்பிட வேண்டும்" என முகமது ஷாஃபி கூறியுள்ளார்.
பகவல் சிங்கும், லைலாவும் முதலில் மறுத்துள்ளனர். பின்னர் உடலின் சிறிது பாகத்தை சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, மீதமுள்ள உடல் துண்டுகளை வீட்டின் வெளிப்புறத்தில் உப்பு, காசுகள் போன்றவை போட்டு புதைத்துள்ளனர். இவர்கள் மூவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.