புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் தலை விரித்து ஆடுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில், மனிதக் கழிவு கலந்திருந்தது. இதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்தனர். இது தொடர்பான புகார்படி, வெள்ளனூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பாக முறையிட்டார். அப்போது, “புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது இது குறித்து தெரிய வந்தது.
புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்” என முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், முறையாக மனுவாகத் தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.