
நூறு கடலோர கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவப் பெண்கள் பயன்பெறும், ‘பெண்கள் இணைப்பு திட்டத்தை’ இன்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், அந்த அமைப்பின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் தொடங்கி வைத்து இருக்கிறார். ‘எம்எஸ்எஸ்ஆர்எஃப்’ என்ற இந்த அமைப்பின் சார்பில், 'உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்காக வலிமைமிகு சிறு தானியங்கள்' என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச மாநாடு சென்னையில் இம்மாதம் 6ம் தேதி தொடங்கி இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று இந்தத் திட்டத்தை துவக்கிவைத்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து மீனவப் பெண்களுக்கு டேப்-கள் (Tabs) வழங்கப்பட்டன. தொழில்நுட்பங்களை பெண்களும் பயன்படுத்தும் வழிகளை மாற்றுவதன் மூலம், அன்றாட வாழ்வில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான தீர்வுகளுக்கான உலகளாவிய அழைப்பே, 'வுமன் கனெக்ட் சேலஞ்ச்' என்று அந்த மாநாட்டில் விளக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பேசிய மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவப் பெண் ஷர்மிளா, ‘தனது உலர் மீன் வியாபாரத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் எப்படி மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் உதவியாக இருக்கும்’ என்பதை எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து, ஒடிசா அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் அதிகாரமளிப்புத் துறை முதன்மைச் செயலர் டாக்டர் அரபிந்தா பதீ ஐஏஎஸ் தனது உரையில், “சிறு தானியங்கள் ஒருவரின் அன்றாட உணவின் ஒரு பகுதியாக மாறும் என்பதற்கு 'ஒடிசா மில்லட் மிஷன்' ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சிறு விவசாயிகளுக்கு, குறிப்பாக மானாவாரி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விவசாய வருமானத்தை ஊக்குவிப்பதற்காக சிறு தானியங்கள் உதவும். ஒடிசா அரசாங்கம் ஒருங்கிணைந்த கொள்கைகளில் செயல்பட்டு வருகிறது மற்றும் கொள்முதல், நுகர்வு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஒடிசா மில்லட்ஸ் மிஷனை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளோம்" என்று பேசினார்.
இந்த மாநாட்டில் தனது பாராட்டு உரையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பேசும்போது, “சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக 2023 அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தச் சூழலில், 'மைட்டி மில்லட்ஸ்' சாம்பியனாகத் தொடர்வதற்கு இந்த இலக்கைக் கடந்து நாம் யோசிக்கக் கூடாது என்பதில்லை. 2023க்குப் பின்னரும் இந்தக் கொள்கையை நாம் கடைபிடிக்க வேண்டும். சிறுதானியங்கள் ஊட்டச்சத்தை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவை. எனவே 2023க்கு அப்பால் சிறு தானியங்களை மக்களுக்காக முன்னெடுத்துச் செல்லும் இலக்கில் நாம் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்" என்று பேசினார்.