தெலுங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி உலகளாவிய நிறுவனங்களை பெருமைப்படுத்தும் வகையில் அதன் பெயர்களும் சாலைகளுக்கு சூட்டப்படும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் அமைக்கப்படும் Regional Ring Road எனப்படும் பசுமை வழி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் நினைவாக அவரது பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை ஒட்டிய உயர்மட்ட சாலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவென்யூ என்று பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தெலுங்கானா அரசு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்க தூதரகத்துக்கு கடிதம் எழுத உள்ளது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக மாற்றும் நோக்கத்தில், மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு பல புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது. அதனுடைய ஒரு பகுதியாக நகரின் முக்கிய சாலைகளுக்கு உலகளாவிய தலைவர்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயர்களை சூட்ட முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள சாலைக்கு 'டொனால்ட் டிரம்ப் அவென்யூ' என்று பெயர் சூட்டப்படும் என்றும், ஒரு அமெரிக்க அதிபரின் பெயர் வெளிநாட்டில் சாலைக்கு வைக்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் தெலுங்கானா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'கூகுள் மேப்' என்பது பலருக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது. அதனை பாராட்டும் வகையில் ஹைதராபாத்தில் உள்ள சாலைக்கு 'கூகுள் ஸ்ட்ரீட்' என பெயர் சூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது. உலகளாவிய நிறுவனங்களை பெருமைப்படுத்தும் வகையில் விரைவில் மைக்ரோசாப்ட், விப்ரோ உள்ளிட்ட அலுவலகங்கள் இருக்கும் இடங்களின் சாலைகளுக்கும் அந்த நிறுவனத்தின் பெயர்கள் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி உலகளாவிய நிறுவனங்களின் பெயர்களை ஒவ்வொரு இடத்துக்கு சூட்டும் பொழுதும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஹைதராபாத் மற்றும் தெலுங்கானாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், இதன் மூலம் முதலீடுகளை ஈர்த்து வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த முடியும் என்றும் ரேவந்த் ரெட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.