

ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையங்களில் முதல் முறையாக மாற்று பாலினத்தவர்கள் 20 பேரை தெலுங்கானா அரசு பணியமர்த்தியுள்ளது.
ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையத்தில் 20 திருநங்கைகள் செக்யூரிட்டியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிறுவனம் நாட்டினுடைய மிகப்பெரிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற போக்குவரத்து சேவை அமைப்பாக உள்ளது. இது 57 நிறுத்தங்களை உள்ளடக்கிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத் மெட்ரோ ரயில்களில் தினமும் 5 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்புக்காக அதுவும் குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ஹைதராபாத் மெட்ரோ 20 திருநங்கைகளை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான அளவு பயிற்சிகளையும் அளித்து பாதுகாப்பு பணியில் சேர்த்துள்ளது. விண்ணப்பித்த சுமார் 400 பேரில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன் மூலம் திருநங்கைகளுக்கு சமூக அதிகாரமளித்தல் உறுதி செய்யப்படுவதுடன், பயணிகள் பாதுகாப்பும் மேம்படுமென்று ஹைதராபாத் மெட்ரோ தெரிவித்துள்ளது. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சமமான வாய்ப்பு அளிப்பதற்கு தெலுங்கானா அரசு பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் கடந்த ஆண்டு உதவி போக்குவரத்து மார்ஷல்ஸ் பணிகள் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டது.
ஹைதராபாத் மெட்ரோவில் பயணிப்போரில் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள். எனவே, பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது. திருநங்கைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், ஒட்டுமொத்தப் பயணிகள் பாதுகாப்பும் மேம்படும் என்று ஹைதராபாத் மெட்ரோ தெரிவித்துள்ளது.