‘ரொம்ப துன்புறுத்துறாங்க’: தமிழக முதல் திருநங்கை காவலர் ராஜினாமா முடிவு!

‘ரொம்ப துன்புறுத்துறாங்க’: தமிழக முதல் திருநங்கை காவலர் ராஜினாமா முடிவு!

கோயம்புத்தூர் மாநகர காவல் துறையில் பணியாற்றி வருபவர் நஸ்ரியா. இந்தியாவிலேயே இரண்டாவது திருநங்கைக் காவலர் மற்றும் தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் என்ற பெருமை பெற்றவர் இவர். ஏற்கெனவே ராமநாதபுரத்தில் காவலராகப் பணியாற்றி வருகையில், அங்கு ஒரு காவலர் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறிய காரணத்தால் இவர் கோவைக்குக் கடந்த 2020ம்ஆண்டு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தார். அதன்படி கோவை மாநகர காவல் துறையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார் அவர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருநங்கை நஸ்ரியா தனது ராஜினாமா கடிதத்துடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'காவல் துறையில் பணியில் சேர்ந்ததிலிருந்தே, பல அத்துமீறல்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறேன். இதனால் அவ்வப்போது தற்கொலை எண்ணங்கள் கூட எனக்கு வந்துள்ளது. அதையெல்லாம் கடந்துதான் வேலை செய்து வந்தேன். இந்நிலையில், எங்களது பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றிவரும் மீனாம்பிகை என்பவர் எனது பாலினம் மற்றும் சாதி குறித்து இழிவாகப் பேசி என்னை மனரீதியாக டார்ச்சர் செய்கிறார். அதனால் விடுப்பில் செல்வது, வேறு இடத்துக்கு மாறுதல் வாங்கிச் செல்ல முயல்வது போன்ற முயற்சிகளைச் செய்து பார்த்தேன். ஆனாலும், இனிமேல் என்னால் இந்தக் காவல் துறையில் பணியாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டேன். அதனால்தான் எனது வேலையை ராஜினாமா செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் போவதற்கே தற்போது காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவலர் நஸ்ரியாவை அழைத்துப் பேசிய பிறகு, “காவலர் நஸ்ரியா கூறியிருக்கும் புகார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் ராஜினாமா செய்யும் முடிவைக் கைவிட்டு, அவரது புகாரை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கம்படி அவரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். அதனையடுத்து, ‘காவலர் நஸ்ரியா கொடுத்த எழுத்துப்பூர்வ புகார் குறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசாரிப்பார் எனவும், ஏற்கெனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இருந்தாலும் அவர் தற்போது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய முறையில் விசாரிக்கப்படும்’ எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com