என்னால் மக்களுக்காக செயல்பட முடியாத நிலை உள்ளது. - முதல்வர் ரங்கசாமி

என்னால் மக்களுக்காக செயல்பட முடியாத நிலை உள்ளது. -  முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி அரசியலில் புதுக்குழப்பம்

புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொம்மையாக செயல்படுவதாக கடந்த வாரம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து புதுவை அரசியல் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. “நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும்” புதுவை முதல்வர் ரங்கசாமி  அண்மையில் தம்மை சந்திக்க வந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர் சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை வெள்ளிக்கிழமை சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறப் பாடுபடவேண்டும் என்று வலியுறுத்தினர். மனு ஒன்றையும் அவர்கள் முதல்வரிடம் அளித்தனர்.

புதுச்சேரிக்குத் தனி மாநில அந்தஸ்து பெறுவது தொடர்பாக விவாதிக்க முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டவேண்டும், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

அவர்களிடம் பேசிய முதல்வர் சொன்ன அதிர்ச்சியான விஷயம் :

 "என்னால் மக்களுக்காக செயல்பட முடியாத நிலை உள்ளது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இதுவரை எதற்கும் பயந்து இருக்கவில்லை," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவேண்டும்” என்பது குறித்து மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர்களும் பார்ப்பதாகக் கூறுகின்றார்கள். ஒரு கட்டத்தில் ‘முடியுமா’ என்று கேட்டால், ‘முடியாது’ என்று சொல்கிறார்கள். வாக்களித்த மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் செய்ய முடியாத சூழலில் இருக்கிறோம். வெளியே உள்ளவர்களுக்குத் தெரியாது. ஆனால் தினசரி மன உளைச்சல்தான் ஏற்படுகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கருத்து வரும். அப்படி ஆகும்போது எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்.

ரங்கசாமியின்  இது குறித்து அந்த குழுவினரிடம் மன விட்டுப் பேசியிருக்கிறார்.  அந்த கூட்டத்தில்  பங்கு கொண்ட மூத்த சமூக செயற்பாட்டாளார் நம்மிடம் முதல்வர் ரஙகசாமியின் ஆதங்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை என்பது வெளிப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. மாநில அந்தஸ்தை வலியுறுத்திய போது ரங்கசாமிக்கு அதிகாரம் போதவில்லை அதனால்தான் கேட்கிறார் என்று கேலி செய்தார்கள். ரங்கசாமி அதிகாரம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு துடிக்கிறார் என்று பேசினார்.

நான் எனக்காகத் துடிக்கவில்லை. மக்களுக்காகத் துடிக்கிறேன். ஆனால் புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவும், பிற்காலத்தில் அரசியலுக்கு வருபவர்கள் இதனால் சிரமப்படக் கூடாது என்பதற்காகத் தான் இதைக் கேட்கிறேன். இதன் விளைவுகளை தற்போது நான் அனுபவித்து வருகிறேன். இதற்கு முன்பு இருந்த சூழ்நிலை வேறு மாதிரி இருந்தது. அதற்கேற்ப அப்போது செயல்பட முடிந்தது. ஆனால் கடந்த ஆட்சிக்குப் பிறகு நிலை மாறிவிட்டது. கடந்த ஆட்சியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக சொல்லிய பிறகு இங்கு நமக்கு ஒன்றுமே இல்லை, மரியாதை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தற்போது வெளிப்படையாகப் பேசுவதால் முன்பு பேசாமல் பயந்து இருந்தேன் என்பது கிடையாது. நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். அரசு ஊழியர்கள் சம்பந்தமாக ஒன்றைச் செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு வருகிறது. ஆனால் அதைச் செய்துவிடாமல் தடுக்க என்னென்ன வழிகள் உள்ளன என்று அதிகாரிகள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். மேலும் சில விஷயங்களில் நீதிமன்ற உத்தரவு வரும்போது எங்களைச் சந்தித்து ஆலோசிக்காமல், அதுகுறித்து எதுவுமே தெரிவிக்காமல் ஒவ்வொரு துறைக்கும் உடனே உத்தரவு அறிக்கையை அதிகாரிகளே வெளியிடுகின்றனர். 

நாம் நினைப்பது போல புதுச்சேரி வளர்ச்சியடைய வேண்டும், மக்கள் நல்லபடி இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் கேட்கிற கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். புதுச்சேரியில் விடுதலை நாள் சம்பிரதாயத்துக்குத் தான் கொண்டாடுகிறோம். ஆனால் உண்மையான விடுதலை நமக்குக் கிடைக்கவில்லை. மாநில அந்தஸ்து புதுச்சேரி அரசியலில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்," என்று ரங்கசாமி நெகிழ்ச்சியுடன் பேசியதை  அந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் பலர் கூறுகிறார்கள்.

காங்கிரஸின் நிலை.

"முதலமைச்சர் ரங்கசாமி கடந்த காலத்தைத் திரும்பி பார்க்க வேண்டும். 2011ஆம் ஆண்டு கட்சி தொடங்கியபோது மாநில அந்தஸ்து கொண்டு வருவதாக கூறி வாக்குறுதி கொடுத்தார். அதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று  5 ஆண்டுகள் நரேந்திர மோதி அரசுக்கு நிபந்தனைகள் இன்றி ஆதரவு கொடுத்தார். அப்படி இருந்தும் மத்திய அரசிடம் இருந்து மாநில அந்தஸ்தை அவரால் பெற முடியவில்லை. அதற்கான முயற்சியும் அவர் எடுக்கவில்லை. கடந்த ஆட்சியில் மாநில அந்தஸ்து பெற வலியுறுத்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் கட்சி கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தை ரங்கசாமி கட்சி புறக்கணித்தது. அதையடுத்து டெல்லி சென்று போராட்டம் நடத்தினோம். அதையும் ரங்கசாமி புறக்கணித்தார்" என்கிறார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

 பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவாரா?

"மாநில அந்தஸ்து பெறவேண்டும் என்பதற்காக பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தோம் என்று  கூறிய முதல்வர், இப்பொழுது அதிகாரிகள் தொல்லை கொடுக்கிறார்கள், நிர்வாகத்தை சரியாக நடத்த முடியவில்லை, நினைத்ததை செய்ய முடியவில்லை என்கிறார் முதல்வர்  

ஆனால் தானும் முதலமைச்சரும் இணைந்து செயல்படுவதாகவும், நிர்வாகத்தில் இடையூறுகள் இல்லை என்றும் ஆளுநர் தமிழிசை சொல்கிறார். முதலமைச்சர் அதிகாரிகளை குறை கூறுகிறார். இதில் எது உண்மை?

தாங்கள் நினைத்ததை செய்ய முடியாத அரசு புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு அடிபணிந்து ஒரு பொம்மை ஆட்சியை ரங்கசாமி நடத்திக் கொண்டிருக்கிறார். உண்மையில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் செயல்படுகிறார். என்பது ஆளுநர் தமிழசையின் அணமைக்காலப் பேச்சுகளில் தொனிக்கிறது.

பா.ஜ.க.வின் நிலை,

கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதுவை பா.ஜ.க., ஆட்சியிலும் பங்கு கொண்டிருக்கிறது. பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம் மாநிலத்தின்  உள்துறை அமைச்சர் சில அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பது உண்மை. அவர்களை மாற்ற மத்திய அரசை கேட்டிருக்கிறோம். ஆனால் எல்லா அதிகாரிகளும் ஒத்துழைக்கவில்லை என்று சொல்லுவது தவறு  என்று சொல்லுகிறார் அவர்.

முதல்வர்  ரங்கசாமி இப்படி வெளிப்படையாகப் பேசுவதற்கு காரணம், "தற்போது  நாம் அனுப்பி வைக்கக்கூடிய கோப்புகள் சில திருப்பி அனுப்பப்படுகின்றன. நாம் அனுப்பி வைப்பது இவ்வாறு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டு கேள்வி எழுகிற கோபத்தால்  இப்படி பேசியிருக்கலாம்."  என்கிறார் நமச்சிவாயம்.

ஆனால்  முதல்வர், மாநில உள்துறை  அமைச்சர்களுக்குகிடையே எழுந்திருப்பது வெறும் கருத்துவேறுபாடில்லை. உடையப்போகும் கூட்டணியின் முதல் கீறல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com