‘மிகுந்த மனச்சோர்வில் இருக்கிறேன்’ திருச்சி சிவா வேதனை!

‘மிகுந்த மனச்சோர்வில் இருக்கிறேன்’ திருச்சி சிவா வேதனை!
Published on

திருச்சி, கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோயில் பகுதியில் இருக்கும் ஸ்டேட் வங்கி காலனியில் உள்ளது திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவா வீடு. இவரது வீட்டுக்கு அருகில் கடந்த புதன்கிழமை நவீன இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் ஒன்று திறக்கப்பட்டது. அந்தத் திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் அரங்கம் திறப்பு விழாவுக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி காட்டி உள்ளனர்.

அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து திருச்சி சிவாவின் வீட்டுக்குள் நுழைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அங்கிருந்து கார், இரு சக்கர வாகனம், வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் நாற்காலிகளை அடித்து உடைத்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரிதாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த வன்முறை நிகழ்வு குறித்தான இரு தரப்புப் புகார்களையும் நீதிமன்றக் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள ஐந்து பேர்களை கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதலின்போது திருச்சி சிவா அரசு முறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்தாா். அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருக்கும் சிவா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், “178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டுக்காக பஹ்ரைன் சென்றிருந்தேன். நடந்த செய்திகளை ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாகத்தான் நான் தெரிந்துகொண்டேன். கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல சோதனைகளைச் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதும் இல்லை. யாரிடமும் புகார் அளித்ததுமில்லை. நான், ‘தனி மனிதனை விட, இயக்கம் பெரிது, கட்சி பெரிது’ என்று எண்ணுகிறவன். தற்போது நிகழ்ந்துள்ள இந்த நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. நான் ஊரில் இல்லாதபோது என்னுடைய குடும்பத்தினர் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். எனது வீட்டில் பணியாற்றும் 65 வயது பெண்மணி காயமடைந்துள்ளார். இதுபற்றி பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், இப்போது பேசக்கூடிய மனநிலையில் நான் இல்லை. எனது வீட்டின் மீதான தாக்குதல் எனக்கு மிகுந்த மனவேதனையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. மனச்சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. இந்தச் சம்பவம் குறித்து இப்போது நான் எதுவும் பேச முடியாது” என்று திருச்சி சிவா எம்.பி. கூறி உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com